கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 58 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தகவல்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 58 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தகவல்
x
தினத்தந்தி 31 Dec 2018 3:45 AM IST (Updated: 30 Dec 2018 11:01 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு 58 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் குமார் கூறினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாரின் சிறப்பான பணி காரணமாக கடந்த ஆண்டை விட குற்ற சம்பவங்களும், விபத்துகளும், விபத்துகளால் ஏற்படும் மரணங்களும் வெகுவாக குறைந்துள்ளன. மாவட்டத்தில் இந்த ஆண்டு நடந்த குற்றங்களில் களவு போன சொத்துக்களில் சுமார் ரூ.1 கோடியே 50 லட்சம் கண்டு பிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

மேலும் மொத்த வழக்குகளில் 96 சதவீத குற்ற வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு காவல் துறையினரால் ஏற்படுத்தப்பட்ட போக்குவரத்து விழிப்புணர்வு நடவடிக்கையால் உயிர் இழப்பு விபத்துகள் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக 58 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு (2017) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலை விபத்துகளில் 592 பேர் மரணம் அடைந்தனர். இந்த ஆண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 408 ஆக குறைந்துள்ளது. புத்தாண்டை முன்னிட்டு மாவட்டத்தில் 1,000 போலீசார், 300 ஆயுதப்படை போலீசார், 250 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

அவர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு போக்குவரத்து விதிமுறைகளை யாரும் மீறுகிறார்களா? என்று கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்கள். புத்தாண்டை முன்னிட்டு சாலைகளில் இருசக்கர வாகனங்களில் வேகமாக செல்லுதல், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த புத்தாண்டை விபத்து இல்லாத புத்தாண்டாக அனைவரும் கொண்டாட வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 797 பொது இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஓசூரில் சிப்காட் போலீஸ் நிலைய வளாகத்தில் தனியார் பங்களிப்புடன் போக்குவரத்து பூங்கா அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கிருஷ்ணகிரி மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணி இருந்தார்.

Next Story