புத்தாண்டையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை கோவையில், 22 இடங்களில் சோதனை மையங்கள்
கோவையில் புத்தாண்டையொட்டி முன்னெச்சரிகை நடவடிக்கையாக 22 இடங்களில் சோதனை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அவை பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை,
கோவையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இன்று (திங்கட்கிழமை) இரவு பல்வேறு இடங்களில் நடக்கின்றன. இதில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவின்பேரில் துணை கமிஷனர் பாலாஜி சரவணன், சுஜித்குமார், பெருமாள் ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனை, ரோந்து பணிகளை மேற்கொள்கிறார்கள். புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் மது குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுபவர்களை பிடிப்பதற்காக 22 இடங்களில் சோதனை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
அதன்படி கோவை அவினாசி சாலையில் அண்ணா சிலை சிக்னல், எல்.ஐ.சி. சந்திப்பு, லட்சுமி மில் சந்திப்பு மற்றும் கொடிசியா சந்திப்பு, சித்ரா சந்திப்பு, கிளாசிக் சந்திப்பு உள்பட 22 இடங்களில் போலீசார் சோதனை மையங்களை அமைத்துள்ளனர். அங்கு சாமியானா போடப்பட்டுள்ளது. மது குடித்து விட்டு இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்களை பிடித்து அவர்களை அந்த மையத்தில் உட்கார வைத்து போக்குவரத்து விதிகள், மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து போலீசார் விளக்கி கூறுவார்கள்.
புத்தாண்டையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடத்தும் ஓட்டல்களில் நள்ளிரவு 1 மணிக்குள் புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக்கொள்ள வேண்டும். கலை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். நீச்சல்குளம் அருகே மேடை அமைக்கக்கூடாது. மேல்தளத்தில் விருந்து ஏற்பாடுகள் செய்யக்கூடாது என்பன உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.
இதுதவிர ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் சாதாரண உடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். கோவை ரெயில் நிலைய நுழைவு வாயிலில் பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிப்பார்கள்.
இதுகுறித்து மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.பெரியய்யா நிருபர்களிடம் கூறியதாவது:-
மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 8 மாவட்டங்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடத்தையொட்டி அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. இதற்காக ஓட்டல்களில் பல்வேறு கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்பவர்கள் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.இன்று (31-ந் தேதி) இரவு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனத்தை இயக்குதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறார்கள். இந்த பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை நகர போலீஸ் துணை கமிஷனர் பாலாஜி சரவணன் கூறியதாவது:-
கோவை நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக மதுகுடித்துவிட்டு அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச்செல்பவர்களின் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர்களுக்கு இதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
பெற்றோரும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக தங்களுடைய குழந்தைகளுக்கு வாகனங்களை கொடுத்து அனுப்பாமல் உரிய கவனம் செலுத்த வேண்டும். விபத்தில்லாத புத்தாண்டாக அமைய அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story