துடியலூர் அருகே ஓய்வு பெற்ற வன அதிகாரி, வங்கி மேலாளர் வீடுகளில் நகை, பணம் திருட்டு
துடியலூர் அருகே ஓய்வுப்பெற்ற வன அதிகாரி, வங்கி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இந்த தொடர் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
துடியலூர்,
துடியலூர் அருகே உள்ள பன்னிமடை ஸ்ரீஆண்டாள் அவென்யூ பகுதியில் வசிப்பவர் பொன்னன் (வயது 62), ஓய்வு பெற்ற வன அதிகாரி. இவருடைய மனைவி ஸ்ரீதேவி (56). இவர்கள் 2 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மகன் திருமணத்திற்காக பத்திரிகை கொடுக்க சொந்த ஊரான ஊட்டிக்கு சென்றனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை பொன்னன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள் பொன்னனுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தடாகம் போலீசார் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை, பணம் திருடுபோய் இருந் தது தெரிய வந்ததது
இதேபோல் அதே பகுதியை சேர்ந்த தினகரன் (58). வங்கி மேலாளராக உள்ளார். அவருடைய மனைவி பரிமளா (51), தமிழக அரசு போக்குவரத்துத்துறை அலுவலர். இவர்கள் 2 பேரும் வீட்டை பூட்டி விட்டு திருச்சியில் உள்ள கோவிலுக்கு சென்றனர்.
அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த நகை, பணத்தை திருடி சென்றனர். இதுகுறித்து அவருக்கு அருகில் உள்ளவர்கள் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த இருசம்பவம் குறித்தும் தடாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 சம்பவங்களிலும் வீட்டில் உள்ளவர்கள் வந்த பின்னர் எவ்வளவு நகை, பணம் மற்றும் பொருட்கள் திருட்டு போனது என்று தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
ஏற்கனவே ஸ்ரீவாரி கார்டன் பகுதியில் வசிக்கும் சீனிவாசபிரபு வீட்டில் நகை திருடிய போது அருகில் இருந்த கயல்விழி என்ற பெண் மற்றும் அவரது கணவர் திருடர்களை விரட்டியதும் குறிப்பிடத்தக்கது. பன்னிமடை பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். அப்போது தான் திருட்டு சம்பவம் நடைபெற்றால் திருடர்களை உடனடியாக பிடிக்க முடியும், என்றனர்.
Related Tags :
Next Story