ரெயில்வே துறையால் தொங்கலில் நிற்கும் அரியூர் மேம்பாலம்


ரெயில்வே துறையால் தொங்கலில் நிற்கும் அரியூர் மேம்பாலம்
x
தினத்தந்தி 31 Dec 2018 4:00 AM IST (Updated: 31 Dec 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

வேலூர்- அரியூர் இடையே கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலம் பணிகள் முழுமைபெறாமல் ஒருவருடமாக தொங்கலில் நிற்கிறது. இதனை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர், 

16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வேலூர் கோட்டை வேலூருக்கு இன்றும் அழகும் பெருமையும் சேர்க்கின்றது. பழமை மாறாமல், பயன்படுத்தப்பட்டு வரும் வேலூர் கோட்டைக்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்துசெல்கின்றனர். அதேபோன்று வி.ஐ.டி.யில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் மாணவர்கள் வந்து படிக்கிறார்கள். பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் சி.எம்.சி. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள்.

மேலும் ஸ்ரீபுரம் தங்கக்கோவிலுக்கு முக்கிய தலைவர்கள் வந்து செல்வதுடன் வெளிநாட்டினரும் அதிக அளவில் வருகிறார்கள். இதனால் வேலூர் நகரம் எப்போதும் வெளிநாட்டினர், வெளிமாநிலத்தினர் நிறைந்து காணப்படுகிறது. இதன்காரணமாக வேலூர் உலக அளவில் பிரசித்தி பெற்றுள்ளது.

ஆன்மிகம், கல்வி, மருத்துவம் என அனைத்துத்துறைகளிலும் சிறந்து விளங்கும் வேலூர் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆரம்பக்கட்ட பணிகளும் நடந்து வருகிறது. முக்கிய தலைவர்கள், வெளிநாட்டினர், வெளிமாநிலத்தினர் தினமும் ஸ்ரீபுரம் தங்கக்கோவிலுக்கு சென்று வருவதால் வேலூரில் இருந்து ஸ்ரீபுரம் செல்லும் சாலை முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக விளங்குகிறது.

மேலும் அணைக்கட்டு, ஒடுகத்தூர், ஊசூர், மேல் அரசம்பட்டு, அரியூர், கரடிக்குடி, தார்வழி, புலிமேடு, குடிசை, அத்தியூர், சிவநாதபுரம், கோவிந்தரெட்டிப்பாளையம், கலங்கமேடு, தெள்ளூர், சேக்கனூர், பூதூர், புத்தூர், ராஜாபாளையம் மற்றும் மலைக்கிராமங்களான குருமலை, வெள்ளைக்கல் மலை, நெச்சிமேடு உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மருத்துவத்திற்கும், அலுவலக பணிக்கும், தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கும், கல்வி கற்கவும் வேலூருக்கு வந்துசெல்கிறார்கள். இவர்களும் இந்த சாலையைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த சாலையில் தொரப்பாடிக்கும், அரியூருக்கும் நடுவில் வேலூர்- விழுப்புரம் ரெயில்பாதை செல்கிறது. இதனால் அடிக்கடி ரெயில்கள் வரும்போது கேட் மூடப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் வரும் முக்கிய தலைவர்கள் முதற்கொண்டு சாதாரண மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கும் செல்லும் மாணவ- மாணவிகள், மருத்துவமனைக்கு செல்பவர்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் ரெயில்வே மேம்பாலம் கட்டவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

அதன்பேரில் ரெயில்வே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக கடந்த 2016-ம் ஆண்டு ரூ.22 கோடியே 98 லட்சத்தில் திட்ட அறிக்கை தயாரித்து மேம்பாலம் கட்டுவதற்காக அந்தப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் அகற்றப்பட்டன.

ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி இரண்டு வகையாக நடைபெற்று வருகிறது. ரெயில்வே தண்டவாளத்திற்கு மேல் உள்ள பகுதியை ரெயில்வே நிர்வாகமும், தண்டவாளத்தின் வடக்கு, தெற்கு பகுதிகளில் கட்டப்படும் பாலத்தை தேசிய நெடுஞ்சாலையும் கட்டி வருகிறது.

ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணிக்கான ஒப்பந்தத்தை ஓய்வு பெற்ற ரெயில்வே என்ஜினீயரான போலாசிங் என்பவர் எடுத்தார். ஆனால் அவரால் மேம்பாலம் கட்டும் பணியை தொடரமுடியவில்லை. அதனால் அவருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, நவீன் என்பவர் பாலம் கட்டும் பணியை மேற்கொண்டார். அப்போது ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய சம்பள பாக்கி ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தை கொடுக்குமாறு போலாசிங்கிடம், நவீன் கேட்டுள்ளார். ஆனால் போலாசிங் பணத்தை கொடுக்க மறுத்ததுடன், தன்னை மிரட்டுவதாக நவீன் மீது போலீசில் புகார் செய்தார்.

இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையின் சார்பில் ரெயில்வே தண்டவாளத்தின் இருபுறங்களிலும் (வடக்கு, தெற்கு) பாலம்கட்டும் பணி முடிவடைந்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டன. தண்டவாளத்தின் மேல் பகுதியில் கட்டப்படவேண்டிய பகுதி மட்டும் கட்டப்படாமல் தொங்கலில் நிற்கிறது.

இதனால் வேலூரில் இருந்து அரியூர், ஸ்ரீபுரம் பகுதிக்கு செல்பவர்கள் சித்தேரி, பென்னாத்தூர் வழியாகவும், அப்துல்லாபுரம் வழியாகவும் சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பென்னாத்தூர் வழியாக சென்றால் 6 கிலோமீட்டர் தூரமும், அப்துல்லாபுரம் வழியாக சென்றால் 7 கிலோமீட்டர் தூரமும் சுற்றி செல்லவேண்டி உள்ளது.

புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தின் அடிப்பகுதி வழியாக இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடிவதில்லை. பாலம் கட்டும் பணி நிறைவடையாததால் மழை பெய்யும்போது அங்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள்.

இந்த நிலையில் வேலூருக்கு வந்த சட்டமன்ற உறுதிமொழிக்குழுவிடம் நந்தகுமார் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு கொடுத்தார். பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், அதனால் பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்தார். ஆனாலும் இதுவரை பாலம் கட்டும் பணியை விரைந்து முடிப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மக்களின் நீண்டநாள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா? என்ற கேள்விக்கு எப்போது விடை கிடைக்கும் என்பது ரெயில்வே துறையின் கையில் தான் உள்ளது.

Next Story