9 ஊராட்சிகளில் காவிரி கூட்டு குடிநீர் வினியோகம் நிறுத்தம் 2 மாதமாக பொதுமக்கள் அவதி


9 ஊராட்சிகளில் காவிரி கூட்டு குடிநீர் வினியோகம் நிறுத்தம் 2 மாதமாக பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 31 Dec 2018 3:30 AM IST (Updated: 31 Dec 2018 1:10 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் குழாய்கள் பராமரிப்பு இல்லாததால் 9 ஊராட்சிகளில் காவிரி கூட்டு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 2 மாதமாக பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

அணைக்கட்டு, 

காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இந்த திட்டத்தின் மூலம் நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட் சிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சின்னச்சேரி, அகரம்சேரி, கூத்தம்பாக்கம், மாதனூர், தோட்டாளம் வெங்கிளி, ஜமீன்குளிதிகை, வடபுதுப்பட்டு உள்ளிட்ட 9 ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டு வந்த காவிரி கூட்டு குடிநீர் கடந்த 2 மாதமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சுகாதாரமான குடிநீரின்றி மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த 9 ஊராட்சிகளுக்கும் வடகாத்திப்பட்டி கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையோரத்தில் 5 லட்சத்து 35 ஆயிரம் கொள்ளளவு கொண்ட தரைதள நீர்த்தேக்க தொட்டி அமைத்து, அதன்மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரமற்ற குடிநீர் குழாய்களை பயன்படுத்தியதாலும் அந்த குழாய்களை பூமிக்கடியில் 1 அடி ஆழத்தில் பதித்ததாலும் தண்ணீர் செல்லும் வேகத்துக்கு குடிநீர் குழாய்களில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக விளை நிலங்களில் செல்கிறது.

இதுகுறித்து காவிரி கூட்டு குடிநீர் திட்ட பராமரிப்பு ஒப்பந்ததாரரிடம் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் உடைந்த குடிநீர் குழாய்களை முறையாக பராமரிக்காததால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் ஊராட்சிகளுக்கு செல்லாமல் ஆறுகள் மற்றும் சாலையில் வீணாக போகிறது. இதனால் இந்த 9 ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் 2 மாதமாக காவிரி குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

தற்போது ஆழ்துளை கிணறுகளில் இருந்து வழங்கப்படும் குடிநீர் அதிக உப்புத்தன்மையாக மாறிவிட்டதால் காவிரி தண்ணீரை அதிகளவில் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக 9 ஊராட்சிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story