தாலிக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் நகை வியாபாரிகள் சங்க பதவியேற்பு விழாவில் தீர்மானம்
நாமக்கல் ஷராப் மற்றும் நகை வியாபாரிகள் சங்க பதவியேற்பு விழாவில் தாலிக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல்,
நாமக்கல்-பரமத்தி ரோடு எஸ்.பி.எஸ். திருமண மண்டபத்தில் நாமக்கல் ஷராப் மற்றும் நகை வியாபாரிகள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. விழாவிற்கு நாமக்கல் முன்னாள் நகர்மன்ற தலைவரும், மணியன் ஜூவல்லரி உரிமையாளருமான டி.எஸ்.மணியன் தலைமை தாங்கினார்.
தங்கமாளிகை நகைக்கடை டி.சிவஞானம், வெங்கடேஸ்வரா ஜூவல்லரி ஆர்.சீனிவாசன், ராமா ஜூவல்லரி என்.வி.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ பத்மம் ஜூவல்லரி ஜே.பாலாஜி வரவேற்றார். மாவட்ட அனைத்து வணிகர் சங்க பேரவை தலைவர் எஸ்.பெரியசாமி, நாமக்கல் அனைத்து வணிகர்கள் சங்க தலைவர் பி.முத்துசாமி, செயலாளர் எஸ்.சங்கர், பொருளாளர் எஸ்.கே.சீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் சிறப்பு விருந்தினராக மத்திய ஜி.எஸ்.டி. தணிக்கை பிரிவு துணை ஆணையாளர் சங்கீதா நேரு கலந்து கொண்டு பேசினார். சங்கத்தின் தலைவராக, தங்கமாளிகை நகைக்கடை டி.சிவஞானமும், துணைத் தலைவராக நித்ய கல்யாண் ஜூவல்லரி எம்.எஸ்.சிவஞானமும், பொதுச் செயலாளராக ஸ்ரீ திருச்செந்தூரான் ஜூவல்லரி எஸ்.பி.கருமலையும், பொருளாளராக ஸ்ரீ பத்மம் ஜூவல்லரி ஜெ.பாலாஜியும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
அதேபோல் இணைச் செயலாளர்களாக ராமா ஜூவல்லரி ஆர்.ராமசீனிவாசன், மணியன் ஜூவல்லரி டி.எஸ்.எம். சுரேஷ்குமார் ஆகியோரும், கவுரவ ஆலோசகர்களாக சரஸ்வதி ஜூவல்லரி என்.பி.ராஜா, விஸ்வா ஜூவல்லரி எஸ்.விஸ்வநாதன் ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டனர். காரிய கமிட்டி உறுப்பினர்களாக 9 பேர் பதவி ஏற்றனர்.
விழாவில் தாலி மற்றும் வெள்ளி அரைஞாண் கொடிக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். நாமக்கல் நகரத்தில் மருத்துவக்கல்லூரி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிகர் நல வாரியம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் நகரில் ‘ரிங் ரோடு’ அமைத்து போக்குவரத்து நெரிசலை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் நகை வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள், நகை கடை ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் எஸ்.பி.கருமலை நன்றி கூறினார்.
Related Tags :
Next Story