திருவட்டார் அருகே கணவர் வீட்டின் முன் பட்டதாரி பெண் தர்ணா


திருவட்டார் அருகே கணவர் வீட்டின் முன் பட்டதாரி பெண் தர்ணா
x
தினத்தந்தி 31 Dec 2018 4:15 AM IST (Updated: 31 Dec 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

கணவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறு கூறி பட்டதாரி பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருவட்டார்,

திருவட்டார் அருகே ஒட்டலிவிளை, மச்சிவிளையை சேர்ந்தவர் ரஞ்சித் சிங் (வயது37), ராணுவ வீரர். இவருக்கும் களியக்காவிளை அருகே செறுவாரகோணத்தை சேர்ந்த லீமா (31) என்ற பட்டதாரி பெண்ணுக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்பு கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ரஞ்சித் சிங் ராணுவத்தில் வேலைக்கு செல்லும்போது, லீமா தனது தாய் வீட்டில் தங்கியிருப்பது வழக்கம்.

கடந்த சில மாதங்களாக ரஞ்சித் சிங் மனைவியை தன்னுடன் சேர்த்து கொள்ளவில்லை எனத்தெரிகிறது. லீமா கணவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது முடியவில்லை.

இந்தநிலையில் நேற்று காலையில் லீமா, மண்எண்ணெய் கேனுடன் கணவர் ரஞ்சித் சிங் வீட்டுக்கு சென்றார். அங்கு கணவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறு கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசார், ராணுவ வீரர் ரஞ்சித் சிங்குடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவர் தான் வெளியூரில் இருப்பதாகவும் இரவு வீட்டுக்கு வருவதாகவும் கூறினார். இதையடுத்து லீமாவிடம் போராட்டத்தை கைவிடுமாறு போலீசார் தெரிவித்தனர். ஆனால், கணவர் தன்னை ஏற்றுக்கொள்ளும் வரை இந்த இடத்தை விட்டு விலகுவதில்லை என லீமா தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story