தேனியில், சரக்குவேனில் ரூ.2½ லட்சம் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
தேனியில், ரூ.2½ லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்களை சரக்கு வேனில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக டாஸ்மாக் விற்பனையாளரை வலைவீசி தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தேனி,
தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சி தலைமையில் போலீசார் அன்னஞ்சி விலக்கு பகுதியில் நேற்று முன்தினம் வாகன தணிக்கை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை மறித்து சோதனை செய்யப்பட்டது. அப்போது அதில் பெட்டிப் பெட்டியாக அரசு மதுபான வகைகள் இருந்தன.
மொத்தம் 2 ஆயிரத்து 328 மதுபான பாட்டில்கள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.2 லட்சத்து 58 ஆயிரம் ஆகும். மதுபானம் எடுத்துச் செல்வதற்கு அவர்களிடம் எந்த அனுமதியும் இல்லை. மேலும் விசாரணையில் இவை பெரியகுளத்தில் உள்ள ஒரு தனியார் மதுபான பாருக்கு கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது.
இந்த மதுபான பாட்டில்களை அன்னஞ்சி விலக்கு புறவழிச்சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து உள்ளனர். இது தொடர்பாக வேன் டிரைவர் பெரியகுளம் அருகே உள்ள இ.புதுக்கோட்டை அண்ணாநகரை சேர்ந்த சேகர் (வயது 42), வேனில் வந்த பெரியகுளம் பங்களாபட்டி பெரியார்காலனியை சேர்ந்த பழனிவேல் (35) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மதுபான பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை விற்பனையாளரான பெரியகுளம் சருத்துப்பட்டியை சேர்ந்த சின்னமுத்தையா (40) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story