அரியலூர் மாவட்டத்தில் 55 புதிய தொழில் முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்


அரியலூர் மாவட்டத்தில் 55 புதிய தொழில் முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
x
தினத்தந்தி 31 Dec 2018 4:15 AM IST (Updated: 31 Dec 2018 3:58 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் 55 புதிய தொழில் முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2019-ஐ முன்னிட்டு முதலீட்டாளர்களுக்கான கருத்தரங்கு நடந்தது. இதற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் 55 புதிய தொழில் முதலீட்டார்களுக்கு ரூ.79.23 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

கருத்தரங்கில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் பேசியதாவது:-

அரியலூர் மாவட்டத்தில், தொழில் முனைவோர்களுக்கு உடனடி உரிமங்கள் கிடைக்க வழிவகை செய்யும் பொருட்டு, கலெக்டர் தலைமையின் கீழ் ஒருமுனை தீர்வு குழுவானது கடந்த மார்ச் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. இக்குழு மாதம் இருமுறை கூடி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவதிலுள்ள இடர்பாடுகளை களைய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

கடந்த 2017-19-ம் நிதி ஆண்டு வரை அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் மாநில முதலீட்டு மானியத் திட்டத்தில் 13 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.31.86 லட்சம் மானியமாகவும், குறைந்த அழுத்த மின் மானியத் திட்டத்தில் 10 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1.22 லட்சம் மானியமாகவும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இதில் திட்ட மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) சகுந்தலா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளஞ்சேரன், கிளை மேலாளர் (தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், திருச்சி) அனிதா, பொருளாளர் (அரியலூர் மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம்) தனஞ்செயன் மற்றும் அலுவலர்கள், தொழில் முனைவோர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக, இணை இயக்குனர் மற்றும் பொது மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) சண்முகராஜன் வரவேற்றார். முடிவில் நுண்ணாய்வாளர் பிரேம்குமார் நன்றி கூறினார். 

Next Story