சின்ன வீராம்பட்டினம் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு
சின்ன வீராம்பட்டினம் கடற்கரைக்கு சென்ற சுற்றுலா பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியாங்குப்பம்,
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. சென்னை, பெங்களூர், மும்பை உள்பட வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் குவிந்துள்ளனர். இவர்கள் மகிழ்விப்பதற்காக விடுதி நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சின்ன வீராம்பட்டினம் கடற்கரையில் சுற்றுலாத்துறை அனுமதியுடன் தனியார் விடுதி சார்பில் நேற்றும், இன்றும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக கடற்கரையில் மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் புதுவையை சேர்ந்த உள்ளூர் மக்கள் மற்றும் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் நூற்றுக்கணக்கானவர்கள் சின்ன வீராம்பட்டினம் கடற்கரைக்கு வந்தனர். இவர்களை மதியம் 3 மணிக்கு மேல் கடற்கரைக்கு செல்ல தனியார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தடுப்பு அமைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிலர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள், சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்வதை யாரும் தடுக்க கூடாது என்று தனியார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை எச்சரிக்கை செய்தனர். இதையடுத்து சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு சென்று, மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர்.
இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், கடற்கரை என்பது எல்லோருக்கும் பொதுவான இடம். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை தடுப்பது என்பது எந்த வகையில் நியாயம். இதுபற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.