புத்தாண்டை கொண்டாட சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும் புதுவை நகரம்
புத்தாண்டை கொண்டாட வந்த சுற்றுலா பயணிகளால் புதுச்சேரி நகரம் நிரம்பி வழிகிறது.
புதுச்சேரி,
புத்தாண்டை புதுச்சேரியில் கொண்டாட வரும் சுற்றுலா பயணிகளின் வருகை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டியே புத்தாண்டு கொண்டாட்ட உணர்வு ஏற்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகள் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளதால் சென்னை, பெங்களூர், ஐதராபாத், கேரள மாநிலங்களில் உள்ள ஏராளமான சுற்றுலா பயணிகள் கடந்த ஒரு வாரமாக புதுவைக்கு அதிக அளவில் வந்துள்ளனர். அதில் ஒரு பிரிவினர் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி சென்ற நிலையில் புத்தாண்டை கொண்டாட பெருமளவில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
இதன் காரணமாக ஸ்டார் ஓட்டல்கள், பட்ஜெட் ஓட்டல்கள், சாதாரண ஓட்டல்கள் என அனைத்து ஓட்டல்களும் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது. தற்போதைய நிலவரப்படி ஓட்டல்களில் புதியதாக தங்க வருபவர்களுக்கு இடமில்லை என்ற நிலவுகிறது.
புத்தாண்டை கடற்கரை, பாரடைஸ் பீச், சின்னவீராம்பட்டினம் போன்ற இடங்களில் கலைநிகழ்ச்சிகளில் கொண்டாட அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதேபோல் ஓட்டல்கள், விடுதிகளிலும் மதுபான விருந்துகளுடன் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நகரில் எங்கு பார்த்தாலும் கவர்ச்சிகரமான உடைகளுடன் சுற்றுலா பயணிகள் சுற்றி வருகின்றனர். மதுக்கடைகளிலும் அவர்களின் கூட்டமாகத்தான் காணப்படுகிறது. ஆண், பெண் வித்தியாசமின்றி மது வகைகளை வாங்கி செல்கின்றனர்.
குறிப்பாக ஒயிட் டவுன் மற்றும் நகரப்பகுதியில் கார்களிலும், இருசக்கர வாகனங்களிலும் சுற்றுலா பயணிகள் சுற்றி வருகின்றனர். இதன் காரணமாக வெளிமாநில கார்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருப்பதால் ரோட்டோர கடைகளிலும் வியாபாரம் களைகட்டி உள்ளது.
அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதால் புதுவையில் உள்ள சுற்றுலா தலங்கள் களைகட்டியுள்ளன. நகரின் முக்கிய வீதிகளில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.