பிறப்பு-இறப்புகளை 21 நாட்களுக்குள் இலவசமாக பதிவு செய்யலாம் மாவட்ட வருவாய் அதிகாரி தகவல்


பிறப்பு-இறப்புகளை 21 நாட்களுக்குள் இலவசமாக பதிவு செய்யலாம் மாவட்ட வருவாய் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 30 Dec 2018 10:43 PM GMT (Updated: 30 Dec 2018 10:43 PM GMT)

பிறப்பு, இறப்புகளை 21 நாட்களுக்குள் இலவசமாக பதிவுசெய்யலாம் என கரூர் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் தெரிவித்து உள்ளார்.

கரூர்,

பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு குறித்த ஆய்வுக்கூட்டம் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிறப்பு, இறப்பு பதிவுகளை மேற்கொள்ள எத்தகைய வழிமுறைகளை கையாள வேண்டும் என்பது குறித்து மாவட்ட பதிவாளர், சுகாதாரத்துறை அலுவலர்கள், வட்டாட்சியர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் மாவட்ட வருவாய் அதிகாரி விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பேசியதாவது:-

தமிழ்நாடு பிறப்பு, இறப்பு சட்டத்தின் படி பிறப்பு பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து 15 வருடத்திற்குள் குழந்தையின் பெயர் பதிவு செய்யப்படவேண்டும். மேலும் 1999-ம் ஆண்டு டிசம்பர் 31-க்கு முன் பதிவு செய்யப்பட்ட பிறப்பினை 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ல் பதிவு செய்யப்பட்டதாக கருதி 15 வருடத்திற்குள் பதிவு செய்ய வேண்டும். தற்போது குழந்தையின் பெயரை பதிவு செய்ய வருகிற 2019-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.

மருத்துவ சேவை கிடைக்க...

தற்போது இணையதளம் மூலமாக பதிவு செய்யும் முறையில் பிறப்பு மற்றும் மகப்பேறு இறப்பு பதிவுகள் பதிவுசெய்யும் போது 12 இலக்க அடையாள எண்ணைப்பெறும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது, இந்த அடையாள எண்ணுடன் பதிவு செய்வதன் மூலம் அனைத்து கர்ப்பமடைந்த தாய்மார்களின் பதிவும் உறுதிசெய்யப்பட்டு 100 சதவீதம் மருத்துவ சேவை அவர்களுக்கு கிடைக்க வழி செய்யப்படுகின்றது. இந்த அடையாள எண்ணை கிராம சுகாதார செவிலியர்கள் மூலமாகவும், பொது இ-சேவை மையங்கள் மூலமாகவும் பெறலாம். அடையாள எண் இருந்தால் உடனுக்குடன் பிறப்பு-இறப்பு சான்றிதழ் பெறமுடியும். அடையாள எண் இல்லாமல் பிறப்பு பதிவு செய்யப்பட்டிருந்தால் சுகாதார அலுவலர்களின் உரிய விசாரணைக்குப் பின்னரே சான்றிதழ் பெற முடியும்.

பதிவு தாமதமானால் கட்டணம் உண்டு

இறப்பு நிகழ்வதற்கு முன்பாக உள்நோயாளியாகவோ அல்லது புறநோயாளியாகவோ மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டிருப்பின் இறப்பிற்கான காரணம் குறித்து சிகிச்சை அளித்த மருத்துவரால் மருத்துவசான்று படிவம் 4 மற்றும் 4ஏ-ல் வழங்கப்படவேண்டும். இது சம்பந்தப்பட்ட மருத்துவரின் கடமையாகும். 21 நாட்களுக்குள் பதிவு செய்யப்படும் பிறப்பு-இறப்பு நிகழ்வுகளுக்கு இலவசமாகவும், 30 நாட்களுக்குள் பதிவு செய்யப்படும் நிகழ்வுகளுக்கு ரூ.100 தாமதகட்டணம் செலுத்திய பிறகும், ஒரு வருடத்திற்குள் பதிவு செய்யப்படும் நிகழ்வுகளுக்கு ரூ.200 தாமதகட்டணம் செலுத்திய பிறகும், ஓராண்டிற்கு மேல் பதிவு செய்யப்படும் நிகழ்வுகளுக்கு ரூ.500 தாமதகட்டணத்துடன் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து உரிய ஆணைகள் பெறப்பட்ட பி்ன்பே சான்றிதழ்கள் பெற இயலும். எனவே, பொதுமக்கள் தாமதமின்றி பிறப்பு, இறப்பு நிகழ்ந்த 21 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட பிறப்பு-இறப்பு பதிவாளரை தொடர்பு கொண்டு இலவசமாக சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, மாவட்டப் பதிவாளர் சின்ராஜ், சுகாதாரத்துறை துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் கோபாலகிருஷ்ணன், அனைத்து வட்டாட்சியர்கள், அனைத்து பேரூராட்சி செயல்அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story