‘சட்டசபையில் கேள்வி எழுப்பி பட்டாசு பிரச்சினையை தீர்க்க வேண்டும்’ முதல்–அமைச்சர், எம்.எல்.ஏ.களுக்கு வணிகர்கள் கூட்டமைப்பு கடிதம்


‘சட்டசபையில் கேள்வி எழுப்பி பட்டாசு பிரச்சினையை தீர்க்க வேண்டும்’ முதல்–அமைச்சர், எம்.எல்.ஏ.களுக்கு வணிகர்கள் கூட்டமைப்பு கடிதம்
x
தினத்தந்தி 30 Dec 2018 11:30 PM GMT (Updated: 30 Dec 2018 11:11 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் 1½ மாதமாக மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை திறக்க சட்டசபையில் கேள்வி எழுப்ப கோரி தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பினர் முதல்–அமைச்சர் மற்றும் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளனர்.

சிவகாசி,

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிளில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. இந்த ஆலைகளில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு வந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி சில வேதிப்பொருட்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்த வேதிப்பொருட்கள் இல்லாமல் பட்டாசுகளை தயாரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் கடந்த மாதம் 13–ந்தேதி முதல் அனைத்து பட்டாசு ஆலைகளும் மூடப்பட்டுள்ளன.

இதனால் இந்த தொழிலில் நேரடியாக பணியாற்றி வந்த 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். பட்டாசு ஆலைகளை திறக்க கோரி பல்வேறு கட்ட போராட்டங்களும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் மாநில பொதுசெயலாளர் இளங்கோவன் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் வருகிற ஜனவரி மாதம் 2–ந்தேதி சட்டசபை கூட்டம் நடைபெறும்போது, பட்டாசு பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பி இந்த பிரச்சினை தீரவும், 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கவும் சட்டசபையில் பேச வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.


Next Story