கர்நாடகத்தில் விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை பிரதமர் குறை கூறியது துரதிர்ஷ்டம் குமாரசாமி அறிக்கை


கர்நாடகத்தில் விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை பிரதமர் குறை கூறியது துரதிர்ஷ்டம் குமாரசாமி அறிக்கை
x
தினத்தந்தி 31 Dec 2018 4:47 AM IST (Updated: 31 Dec 2018 4:47 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை பிரதமர் குறை கூறியது, துரதிர்ஷ்டவசமானது என்று குமாரசாமி கூறி இருக்கிறார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கூட்டணி அரசு, கொடுத்த வாக்குறுதிப்படி விவசாய கடனை தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை ஏமாற்றிவிட்டதாக பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன்பு கூறினார். இது ஒரு கொடூரமான நகைச்சுவை என்றும் அவர் விமர்சித்தார். பிரதமருக்கு பதிலளிக்கும் விதமாக முதல்-மந்திரி குமாரசாமி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

கர்நாடகத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்யும் பணியை தொடங்கியுள்ளோம். இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. விவசாயிகளின் நலனை பாதுகாக்க எங்கள் அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது. கடன் தள்ளுபடிக்கான சான்றிதழை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம்.

ஆயினும் பிரதமர் மோடி , கர்நாடகத்தில் கூட்டணி அரசின் விவசாய கடன் தள்ளுபடி என்பது கொடூரமான நகைச்சுவை என்று கூறியுள்ளார். கடன் தள்ளுபடி குறித்த முழு உண்மை விவரங்களை அறிந்து கொள்ளாமல், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தவறான தகவலை வழங்கியுள்ளார்.

எங்களின் விவசாய கடன் தள்ளுபடி திட்டம் குறித்து முழுமையாக அறிந்த பிறகு குறை சொல்ல வேண்டும். விவசாய கடன் தள்ளுபடி திட்டம் ஒரு திறந்த புத்தகம். மற்ற மாநிலங்களை போல் அல்லாமல், இதுதொடர்பாக அனைத்து தகவல்களும் ஆன்லைனில் கிடைக்கிறது.

உண்மையான விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடியின் பயன் கிடைக்கும் நோக்கத்தில் மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்துவதில் மாநில அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறது. உண்மையான விவசாயிகள் ஒவ்வொருவரும் இந்த திட்டத்தின் பயனை அடைவதை மாநில அரசு உறுதி செய்கிறது. அனைத்து இடைத்தரகர்களும் குறிப்பாக கூட்டுறவுத்துறையில் அகற்றப்பட்டுவிட்டனர்.

பிற மாநிலங்களும் இந்த நடைமுறையை பின்பற்ற ஆர்வம் காட்டுகின்றன. ஆதார் எண், குடும்ப அட்டை மற்றும் நில ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதனால் தவறுகள் நடைபெறுவது முழுவதுமாக தடுக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இதுவரை 60 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.350 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கடன் தள்ளுபடி தொகை சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாரமும் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த வாரம் மேலும் 1 லட்சம் விவசாயிகள் ரூ.400 கோடி பெறுவார்கள். இதுவரை 8½ லட்சம் விவசாயிகள் தங்களின் ஆவணங்களை வழங்கியுள்ளனர். இன்னும் 12½ லட்சம் விவசாயிகள் தங்களின் ஆவணங்களை வழங்க வேண்டும்.

இந்த மாத இறுதிக்குள் அனைத்து விவசாயிகளின் கடனும் திரும்ப செலுத்தப்படும். இந்த பணியை, குறித்த காலக்கெடுவுக்குள் முடிக்க அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை வெற்றிகரமாக முடிப்பார்கள்.

இவ்வளவு உண்மைகளை மறைத்து பிரதமர் மோடி தவறான தகவல்களை மக்களுக்கு வழங்கியுள்ளார். விவசாயிகளின் நலனை காப்பதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது. பிரதமர், அரசியல் ஆதாயத்திற்காக கடன் தள்ளுபடி குறித்து தவறான தகவல்களை கூறுவது சரியல்ல.

டெல்லியில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். ஆனால் அவர்களின் கோரிக்கையை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. விவசாயிகளுக்கு உதவும் பணியை செய்து வரும் கர்நாடக அரசை, பிரதமர் குறை கூறி இருப்பது, விரும்பத்தக்கது அல்ல. அவரது குற்றச்சாட்டு துரதிர்ஷ்டவசமானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story