காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சி பா.ஜனதா தலா ரூ.30 கோடி குதிரை பேரம் சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டு


காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சி பா.ஜனதா தலா ரூ.30 கோடி குதிரை பேரம் சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 31 Dec 2018 4:51 AM IST (Updated: 31 Dec 2018 4:51 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜனதா தலா ரூ.30 கோடி வரை வழங்குவதாக கூறி குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

முதல்-மந்திரியாக குமாரசாமி உள்ளார். இந்த நிலையில் கர்நாடக மந்திரிசபை கடந்த 22-ந் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. மந்திரிசபையில் இருந்து 2 பேர் நீக்கப்பட்டனர். புதிதாக 8 மந்திரிகள் சேர்க்கப்பட்டனர்.

மந்திரி பதவியை பறித்ததால், ரமேஷ் ஜார்கிகோளி கடும் அதிருப்தியில் உள்ளார். அவர் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவில் சேர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ரமேஷ் ஜார்கிகோளி டெல்லியில் முகாமிட்டு, பா.ஜனதா தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

ரமேஷ் ஜார்கிகோளி மூலம் கூட்டணி அரசுக்கு சிக்கல் ஏற்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ரமேஷ் ஜார்கிகோளியை தொடர்புகொள்ள காங்கிரஸ் தலைவர்களான சித்தராமையா, மந்திரி சதீஸ் ஜார்கிகோளி ஆகியோர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ரமேஷ் ஜார்கிகோளி இதுவரை காங்கிரஸ் தலைவர்களின் கைகளுக்கு சிக்கவில்லை.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க தலா ரூ.30 கோடி வரை வழங்குவதாக கூறி பா.ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ள பா.ஜனதா, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.25 கோடி முதல் ரூ.30 கோடி வரை வழங்குவதாக கூறி குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளது. பா.ஜனதாவினர் ஊழல்வாதிகள் இல்லை என்றால், இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது?. கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதை தவிர பா.ஜனதா எதிர்க்கட்சியாக வேறு என்ன செய்தது?. இவ்வாறு சித்தராமையா கூறினார்.

இதற்கிடையே சித்தராமையாவின் குற்றச்சாட்டை எடியூரப்பா மறுத்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் அவர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், எங்கள் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவை நேரில் சந்திக்க டெல்லி வந்துள்ளதாக கூறப்படுவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை நாங்கள் தொடர்பு கொள்ளவில்லை.

இதுகுறித்து ஊடகங்களில் வரும் தகவல்கள் வெறும் வதந்திகளே. எங்கள் கட்சியின் மாநில தலைவர்கள் கூட்டத்திற்காக நான் டெல்லி வந்தேன். அமித்ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் பரபரப்பாக உள்ளார். கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்யவில்லை.

மாநிலத்தில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால் பா.ஜனதா என்ன செய்யும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். கர்நாடகத்தில் பிரமாண்டமான அளவில் விவசாயிகள் மாநாட்டை நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

இதில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுப்போம். பிரதமரை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான நேரம் இன்னும் கிடைக்கவில்லை. இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story