திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில், தக்காளி விலை திடீர் உயர்வு
திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் பூக்களுக்கு அடுத்தபடியாக காய்கறிகள் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டம் முழுவதும் விளைவிக்கப்படும் காய்கறிகள் திண்டுக்கல் காந்தி மார்க்கெட் மற்றும் மாநிலத்தில் 2-வது மிகப்பெரிய மார்க்கெட்டான ஒட்டன்சத்திரத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கும் காய்கறிகள் கொண்டு செல்லப்படுகின்றன.
இதற்கிடையே, வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் காய்கறி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகமாக தக்காளி பயிரிடப்படும் வடமதுரை, அய்யலூர், சித்தூர், கொம்பேறிப்பட்டி, காக்காயினிபட்டி, பஞ்சந்தாங்கி ஆகிய பகுதிகளில் சாகுபடி பரப்பு குறைந்துவிட்டது. இதன்காரணமாக தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து கணிசமாக குறைந்துள்ளது.
திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் கடந்த வாரம் 25 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனையானது. இந்தநிலையில் நேற்று திடீரென ஒரு பெட்டி தக்காளி ரூ.450 முதல் ரூ.500 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி, கடந்த வாரம் ரூ.15 வரை விற்பனையான ஒரு கிலோ தக்காளி நேற்று ரூ.20 ஆக அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து வியாபாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘கஜா’ புயலால் பயிர்கள் சேதமடைந்ததாலும், வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்யாததாலும் தக்காளி விளைச்சல் குறைந்துவிட்டது. இதன்காரணமாக ஆந்திராவில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்படுவதால் விலை அதிகரித்துள்ளது. தை மாதம் முதல் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கும் என்றார்.
Related Tags :
Next Story