நெல்லையில் பெண்களிடம் நகை பறிப்பு: கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது - 28 பவுன் மீட்பு


நெல்லையில் பெண்களிடம் நகை பறிப்பு: கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது - 28 பவுன் மீட்பு
x
தினத்தந்தி 30 Dec 2018 10:15 PM GMT (Updated: 30 Dec 2018 11:26 PM GMT)

நெல்லையில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 28 பவுன் நகை மீட்கப்பட்டது.

நெல்லை, 

நெல்லை மாநகர பகுதியில் கடந்த ஒரு ஆண்டாக வீட்டு முன்பு கோலம் போடுகின்ற பெண்களிடம் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து நகை பறித்து செல்லும் சம்பவம் அதிகளவில் நடந்து வருகிறது. தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களும் தினமும் தொடர்கதையாக நடந்து வந்தது.

குறிப்பாக பாளையங்கோட்டை, பெருமாள்புரம், கே.டி.சி.நகர், என்.ஜி.ஓ. காலனி, புறவழிச்சாலை ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருடர்கள் தினமும் கைவரிசை காட்டி வருகிறார்கள். இதுபோன்ற சம்பவங்களை கட்டுப்படுத்தவும், தொடர் திருட்டில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடிப்பதற்காகவும் நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்கோல்டன் சிங் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கடந்த ஒரு வாரமாக மாநகர பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதில் பாளையங்கோட்டை பகுதியில் சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர்கள் பாளையங்கோட்டையை சேர்ந்த முத்துக்குமார் (வயது 24), பெருமாள் வடக்கு ரதவீதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (23), வடக்கு உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்து (22) என்பதும், அவர்கள் நெல்லை மாநகர பகுதியில் காலையில் கோலம் போடுகின்ற பெண்கள், தனியாக நடந்து செல்கின்ற பெண்களை நோட்டமிட்டு மோட்டார் சைக்கிளில் சென்று நகைகளை பறித்து சென்றதும் தெரியவந்தது.

மேலும் இவர்களில் ஒருவன், முதலில் அந்த பகுதிக்கு சென்று வயதான பெண்கள் மற்றும் நகை அதிகம் போட்டுக்கொண்டு நடமாடுகின்ற பெண்கள், வீட்டில் தனியாக இருக்கின்ற பெண்கள் யார்? யார் என்றும், அவர்களிடம் எப்படி நகை-பணத்தை திருடி செல்லலாம் என்றும் நோட்டமிட்டு வந்து தகவல் கொடுப்பான். அந்த தகவலின் பேரில் மற்ற 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்று நகை பறிப்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் பலரிடம் கத்தியை காட்டி பணம் பறித்தல், பெண்களிடம் முகவரி கேட்பது போல் நகை பறித்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டதும், நகை பறிப்புக்கு பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள்களை 3 மாதத்துக்கு ஒருமுறை மாற்றி விடுவதும் தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார், 3 பேரையும் கைது செய்து அவர்கள் தனியார் வங்கியில் அடகு வைத்து இருந்த 28 பவுன் தங்க நகைகளை மீட்டனர். அதன் மதிப்பு ரூ.7 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் பாலசுப்பிரமணியன் கல்லூரி மாணவர் என்பதும், முத்து ஐ.டி.ஐ. முடித்துவிட்டு தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

Next Story