திருப்பரங்குன்றம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் மறியல்
திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளத்தில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் அருகே உள்ளது, தனக்கன்குளம். இங்குள்ள பெரிய கண்மாய்க்குள் செல்லும் குடிநீர் குழாய் சமீபத்தில் உடைந்தது. இதனால் குழாயில் தண்ணீர் கசிந்து வீணாக வெளியேறியது. அதில் மழை தண்ணீரோடு, குடிநீரும் கலந்து கண்மாய் பெருகியது. மேலும் மந்தை திடலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றக்கூடிய குழாயும் சேதமடைந்தது. இதனால் கடந்த 2 வாரங்களாக தனக்கன்குளத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்படாத நிலை இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் இன்றி கடும் அவதியடைந்து வந்தனர். மேலும் ஒரு குடம் குடிநீரை ரூ.10, ரூ.20 என்று விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வந்தனர். குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளானார்கள். இதுகுறித்து புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
இந்தநிலையில் அப்பகுதி மக்கள் நேற்று தென்பழஞ்சி–காமராஜர் பல்கலைக்கழக சாலையில் பாறாங்கற்கள் மற்றும் இரும்பு கம்பிகளால் தடை ஏற்படுத்தினர். பின்னர் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார், மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் மறியலை கைவிட மறுத்தனர். இதில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் முருகன், தனக்கன்குளம் ஊராட்சி செயலாளர் ரவி கிருஷ்ணன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசி, குடிநீர் சீராக வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனையடுத்து ஆணையாளர் முருகன் நேரடி பார்வையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதற்கு வசதியாக குழாய் சீரமைக்கப்பட்டதுடன், கண்மாயில் உடைந்த குடிநீர் குழாயும் சரிசெய்யும் பணி நடந்தது.