திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை


திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 31 Dec 2018 3:45 AM IST (Updated: 31 Dec 2018 5:57 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் மனோகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பூர், 

உலகம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு மாநகர போலீஸ் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் மனோகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புத்தாண்டு தினத்தையொட்டி இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மதுபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது. பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையிலோ, அச்சுறுத்தும் வகையிலோ வேகமாக வாகனங்களை ஓட்டக்கூடாது. தெருக்களில் கூடி நின்று சாலையில் நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்களுக்கும் வற்புறுத்தியோ, கேலி செய்யும்படியோ புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்க கூடாது. இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அதிக சத்தம் மற்றும் கூச்சல் எழுப்பக்கூடாது.

சாலைகள் மற்றும் பொது இடங்களில் பட்டாசுகள் வெடிக்க கூடாது. புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஓட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் ஆபாச நடனங்கள் நடத்தக்கூடாது. புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடத்தும் ஓட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகள் போலீசாரிடம் முன் அனுமதி பெற்று நடத்த வேண்டும். அனுமதியின்றி எந்தவித நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது. ஓட்டல் மற்றும் கேளிக்கை விடுதிகளில் உள்ள நீச்சல் குளங்களின் மேல் மேடை அமைத்து எந்தவித நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது.

மேலும், மதுபோதையில் யாரையும் நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதிக்காமல் நிர்வாகத்தினர் விழிப்புடனும். பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும். கேக் மற்றும் இனிப்பு வகைகளை மற்றவர்கள் மீது வீசி மனவருத்தம் ஏற்படும்படி நடந்து கொள்ளக்கூடாது. இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வருகிற புத்தாண்டு போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இனிதாகவும், வளமானதாகவும் அமையவும், விபத்துகள் இல்லாமல் பாதுகாப்பாக கொண்டாடவும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story