யானைகள் விளைநிலங்களுக்குள் நுழைவதை தடுக்க விவசாயிகள் தேனீக்களை வளர்க்க பரிந்துரை மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்


யானைகள் விளைநிலங்களுக்குள் நுழைவதை தடுக்க விவசாயிகள் தேனீக்களை வளர்க்க பரிந்துரை மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்
x
தினத்தந்தி 1 Jan 2019 4:15 AM IST (Updated: 31 Dec 2018 10:28 PM IST)
t-max-icont-min-icon

யானைகள் விளை நிலங்களுக்குள் நுழைவதை தடுக்க விவசாயிகள் தேனீக்களை வளர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி,

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி வனப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 10 அல்லது 20 யானைகள் மட்டுமே இருந்துள்ளது. தற்போது 100-க்கும் மேற்பட்ட யானைகள் ஒன்று சேர்ந்துள்ளது. யானைகளை வனத்துறையினர் விரட்டும் போது, பொதுமக்களின் இடையூறால் தனித்தனியாக பிரிந்து பல கூட்டங்களை உருவாக்கியுள்ளது. இதனால் வனத்துறையினர் யானைகளை விரட்ட முடியாமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அவர்கள் வாரக்கணக்கில் தூங்காமல் பணி செய்கின்றனர்.

ஜவளகிரி பகுதியில் உள்ள வனத்திலிருந்து யானைகள் வெளியேறுவதை தடுக்க செங்குத்தாக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் அதில் முளைத்த செடிகளை கிராமத்தினர் வெட்டியதால், மண் சரிவு ஏற்பட்டு யானைகள் அந்த பள்ளத்தின் வழியாக இறங்கி வந்தவிடுகிறது. யானைகள் வெளியேறுவதை தடுக்க ஒரு கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பு அமைக்கும் திட்டம் குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது தேன்கனிக்கோட்டை அடுத்த ஜவளகிரி பகுதியில் கிரானைட் கற்களை கொட்டி, ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் இந்த ஆண்டு முதல் முறையாக நல்ல முறையில் ராகி அறுவடை செய்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

எனவே, கலெக்டர் பிரபாகர், இத்திட்டத்தை மற்ற இடங்களிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, 10 கி.மீ தூரத்திற்கு இரண்டரை மீட்டர் அகலம், இரண்டு மீட்டர் உயரத்திற்கு கிரானைட் கழிவுகளை அடுக்கி தடுப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கல்லும் 8 டன் எடை வரை உள்ளதால் பணிகள் மெதுவாக நடக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் 700 மீட்டர் தூரத்திற்கு இப்பணிகள் முடிந்துள்ளது. மேலும் இரண்டு பக்கமும் பில்லர் அமைத்து நடுவில் 14 எம்.எம். கம்பிகளை கொண்டு தடுப்பு அமைக்கும் திட்டமும் உள்ளது.

அத்துடன் வனத்தையொட்டி உள்ள ஆயிரம் விவசாயிகள் தேனீக்களை வளர்க்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் வரும் 2019-ம் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி கூறினார்.

Next Story