காரிமங்கலம் பஸ் நிலையத்தில் ம.தி.மு.க. கொடி கம்பத்தை அகற்றியதால் பரபரப்பு
காரிமங்கலம் பஸ் நிலையத்தில் ம.தி.மு.க. கொடி கம்பத்தை அதிகாரிகள் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காரிமங்கலம்,
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பஸ் நிலையம் மற்றும் பைசுஅள்ளி ஆகிய இடங்களில் ம.தி.மு.க. கட்சியின் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் துரை கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கிருபானந்தன், ஒன்றிய செயலாளர் முனுசாமி, வக்கீல் வேல்முருகன், ரத்தினசாமி மற்றும் தொண்டரணி சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி கட்சி கொடியை ஏற்றி வைத்தார். அப்போது பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் சரவணன், குமரவேல், ராமதாஸ், குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். விழா ஒருங்கிணைப்பை பாலக்கோடு ஒன்றிய செயலாளர் குமரவேல் செய்திருந்தார்.
இந்நிலையில், கொடி ஏற்று விழா முடிந்த சில மணி நேரத்தில் பஸ் நிலையம் வந்த காரிமங்கலம் பேரூராட்சியின் செயல் அலுவலர் ஆயிஷா, அலுவலக உதவியாளர் கார்த்திகேயன் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் போலீசார் உதவியுடன் பஸ் நிலையத்தில் ஏற்றிய ம.தி.மு.க. கொடி கம்பத்தை அகற்றி அதை பேரூராட்சி அலுவலகத்துக்கு எடுத்து சென்றனர். இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, பேரூராட்சியின் அனுமதி பெறாமல் கொடி கம்பம் வைக்கப்பட்டதை தொடர்ந்து கொடி கம்பம் அகற்றப்பட்டுள்ளது. வேண்டுமானால் கட்சியினர் உரிய அனுமதி பெற்று கொடி கம்பத்தை வைத்து கொள்ளலாம் என்று கூறினார்கள். பஸ் நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் ஏற்றப்பட்ட கொடி கம்பத்தை சில மணி நேரத்திலே அதிகாரிகள் அகற்றிய இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story