பிளஸ்-2 மாணவி கடத்தல், போக்சோ சட்டத்தில் மதுரை டிரைவர் கைது


பிளஸ்-2 மாணவி கடத்தல், போக்சோ சட்டத்தில் மதுரை டிரைவர் கைது
x
தினத்தந்தி 1 Jan 2019 3:45 AM IST (Updated: 31 Dec 2018 10:53 PM IST)
t-max-icont-min-icon

திருமண ஆசைவார்த்தை கூறி பிளஸ்-2 மாணவியை கடத்திய மதுரை டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த அவரது தோழியும் கைதானார்.

கம்பம்,

கொடைக்கானலை சேர்ந்த 17 வயதுடைய மாணவி கம்பத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 22-ந்தேதி பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இது குறித்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்தனர். அப்போது சம்பவம் நடந்த அன்று மதியம் பள்ளிக்கு வந்த ஒரு பெண், தான் மாணவியின் சகோதரி என கூறிக்கொண்டு அவரை அழைத்து சென்று விட்டதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து காணாமல் போன மாணவியை கண்டு பிடித்து தருமாறு அவரது உறவினர் கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடிவந்தனர். இந்தநிலையில் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மாணவியை அழைத்து சென்றவர் மதுரை திடீர் நகரை சேர்ந்த நூர்நிஷா(21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் வெளியான தகவல்கள் வருமாறு:-

மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்தவர் காதர்அவுலியா (21). கார் டிரைவர். இவருக்கு நூர்நிஷா தோழியாவார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மாணவி இந்த பகுதியில் குடியிருந்து உள்ளார். அப்போது மாணவியும், காதர்அவுலியாவும் காதலித்து உள்ளனர். இந்த விஷயம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தவுடன் மாணவியை கண்டித்தனர். எனவே காதர்அவுலியா, மாணவியை திருமணம் செய்ய முடிவு செய்தார். இதற்கு உடந்தையாக நூர்நிஷா மதுரையில் இருந்து கம்பத்தில் மாணவி படிக்கும் பள்ளிக்கு சென்று, சகோதரி என கூறி மாணவியை அழைத்து சென்று காதர்அவுலியாவிடம் சேர்த்துவிட்டுள்ளார். இவ்வாறு தகவல்கள் வெளியானது.

இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று முன்தினம் மதுரையில் காதர்அவுலியாவை கைது செய்து மாணவியை மீட்டு கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அப்போது திருமண ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து காதர்அவுலியாவை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த நூர்நிஷாவும் கைது செய்யப்பட்டார். மாணவி 18 வயதை அடையாததால் தேனியில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Next Story