அமைச்சரின் வீட்டில் இருந்து பேசுவதாக கூறி உணவு பாதுகாப்பு அலுவலருக்கு செல்போனில் கொலை மிரட்டல் - அண்ணன், தம்பி மீது வழக்கு


அமைச்சரின் வீட்டில் இருந்து பேசுவதாக கூறி உணவு பாதுகாப்பு அலுவலருக்கு செல்போனில் கொலை மிரட்டல் - அண்ணன், தம்பி மீது வழக்கு
x
தினத்தந்தி 31 Dec 2018 10:15 PM GMT (Updated: 31 Dec 2018 5:23 PM GMT)

அமைச்சரின் வீட்டில் இருந்து பேசுவதாக கூறி உணவு பாதுகாப்பு அலுவலருக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்த அண்ணன், தம்பி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம், 

உளுந்தூர்பேட்டை அடுத்த பரிக்கல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பால் குளிரூட்டும் நிலையம் உள்ளது. இந்த பால் குளிரூட்டும் நிலையம் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன், அங்கு சென்று திடீர் சோதனை மேற்கொண்டார்.

அப்போது பால் குளிரூட்டும் நிலையம் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதையும், உணவு பாதுகாப்பு தர நிர்ணய உரிமம் பெறாமல் இயங்கி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பால் குளிரூட்டும் நிலையத்தின் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்காக அதனை நடத்தி வருபவருக்கு உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன் நோட்டீசு கொடுத்தார்.

இதையறிந்த பால் குளிரூட்டும் நிலைய உரிமையாளரின் உறவினரும், ஏற்கனவே திண்டிவனம் வெள்ளிமேடுபேட்டை பகுதியில் ஆவின் பால் கலப்பட வழக்கில் கைதாகி பின்னர் நீதிமன்றத்தினால் அவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டவருமான சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த வைத்தியநாதன், அவரது தம்பி மகேஷ் ஆகிய இருவரும் உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவனை செல்போனில் தொடர்பு கொண்டு தாங்கள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீட்டில் இருந்து பேசுகிறோம் எனக்கூறியதோடு, பால் குளிரூட்டும் நிலையத்தின் மீது நடவடிக்கை எடுத்தால் தொலைத்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். மேலும் அவர்கள் இருவரும், கதிரவனை தகாத வார்த்தையால் திட்டியதோடு இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் பேசி கண்காணாத இடத்திற்கு இடமாற்றம் செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

இந்த ஆடியோ குரல் பதிவு தற்போது ‘வாட்ஸ்-அப், முகநூல்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் புகார் கொடுத்தார். புகாரை பெற்ற அவர், அதனை திருநாவலூர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். அதன்பேரில் வைத்தியநாதன், மகேஷ் ஆகிய இருவரின் மீதும் அரசு அலுவலரை தகாத வார்த்தையால் திட்டுதல், அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், ஏமாற்றுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story