உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த விழிப்புணர்வு கூட்டம் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா பங்கேற்பு
நாமக்கல்லில் தமிழ்நாடு ‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2019’ குறித்த விழிப்புணர்வு மற்றும் விளக்க கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்த ஆணையை தொழில் முனைவோருக்கு வழங்கினர்.
நாமக்கல்,
நாமக்கல்லில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோருக்கான, தமிழ்நாடு ‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2019’ குறித்த விழிப்புணர்வு மற்றும் விளக்க கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார்.
எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் 888 தொழில் முனைவோர்களுக்கு ரூ.1,230 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த ஆணைகளை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவுத்்்் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் வழங்கினர்.
அதைத்தொடர்ந்து நடந்த கூட்டத்தில் அமைச்சர் டாக்டர் சரோஜா பேசியதாவது:-
தொழில் தொடங்குவதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், சாலை வசதிகள் நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பான முறையில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் தொழில்துறை முன்னேற்றத்திற்கு தடையற்ற மின்சாரம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவது முக்கியமான காரணமாகும். இளைஞர்கள் கல்லூரி படிப்பை முடித்து தொழில் தேடுபவர்களாக இல்லாமல் வேலைவாய்ப்புகளை வழங்குபவர்களாக உருவாக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-
உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது. புதியதாக தொழில் தொடங்குபவர்கள் மாவட்டத்தில் அதிக அளவில் நடைபெறும் தொழிலையே தொடங்காமல் எது தேவை என்பதை தெரிந்து அந்த தொழிலை தொடங்க வேண்டும்.
புது புது சிந்தனைகளோடு என்ன தொழில் செய்யலாம் என்பதை சிந்தித்து தொழில் தொடங்க வேண்டும். அவ்வாறு தொடங்கும் போது அதிக லாபம் கிடைக்கும். அதற்கு தேவையான உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது. அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாக அது வாய்ப்பாக இருக்கும். தொழிலுக்கு தேவையான மின்சாரத்தை வழங்க அரசு தயாராக உள்ளது. 24 மணி நேரமும் முழுமையாக மின்சாரம் கொடுக்கப்படும் மாநிலம் தமிழகம் தான்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சாயப்பட்டறை தொழிலை பாதுகாக்கும் வகையில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நாமக்கல் மாவட்டத்திற்கு மட்டும் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். இந்த திட்டத்திற்கு சாயப்பட்டறை உரிமையாளர்கள் தங்கள் பங்காக சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தேவையான நிலத்தை வழங்கினால் மத்திய அரசின் அனுமதி பெற்று தமிழகஅரசு உடனடியாக சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அமைச்சர் தங்கமணி பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரங்கசாமி, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக கிளை மேலாளர் பாஸ்கரன், முன்னோடி ஆற்றல் தணிக்கையாளர் டாக்டர் வெங்கட நாராயணன், முன்னோடி வங்கி மேலாளர் முத்தரசு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சங்கத்தலைவர் இளங்கோ, மாவட்ட தொழில் மைய மேலாளர் (கடன்) சிவக்குமார் உள்்்பட அரசு அலுவலர்கள், தொழில் முனைவோர், மகளிர் சுய உதவிக்குழுவினர், படித்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story