பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள், மாற்று தொழில் தொடங்க அரசு உறுதுணையாக இருக்கும்
பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள், மாற்று தொழில் தொடங்க அரசு உறுதுணையாக இருக்கும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். இதுகுறித்து அவர் கோவில்பட்டியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவில்பட்டி,
திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் போஸின் மறைவை தொடர்ந்து அந்த தொகுதி காலியாக இருந்தது. திருவாரூரில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவை தொடர்ந்து அந்த தொகுதியும் காலியாக இருந்தது. திருப்பரங்குன்றத்தில் நடந்த தேர்தல் தொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த சரவணன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் திருவாரூரில் மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இடைத்தேர்தலை அறிவிப்பதற்கு முன்பாகவே அ.தி.மு.க. தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது. திருப்பரங்குன்றத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணி நடந்தது.
‘கஜா‘ புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் வரலாற்றிலேயே முதல் முறையாக 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் நிவாரண பணிகளை மேற்கொண்டனர். அங்கு ரூ.1,000 கோடிக்கு அதிகமான நிவாரண பொருட்களை வழங்கினோம். அந்த நன்றி உணர்வுடன் பொதுமக்கள் திருவாரூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை அமோக வெற்றி பெறச் செய்வார்கள்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்னரே சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் வருகிற ஜனவரி 1-ந்தேதியில் இருந்து பிளாஸ்டிக் தடை செய்யப்படும் என்று அறிவித்தார். எனவே பிளாஸ்டிக் தடைக்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்காக ரூ.54 லட்சம் செலவில் தமிழகத்தில் 5 மண்டலங்களாக கருத்தரங்குகள், மனித சங்கிலி போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உள்ளது. பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையை பொதுமக்கள் 100 சதவீதம் ஏற்று கொண்டுள்ளனர். பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள், மாற்று தொழில் தொடங்குவதற்கு அரசு உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
Related Tags :
Next Story