சூளகிரி பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை விரட்டிட நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம், முருகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


சூளகிரி பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை விரட்டிட நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம், முருகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 1 Jan 2019 4:45 AM IST (Updated: 1 Jan 2019 12:39 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை விரட்டிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் முருகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

கிருஷ்ணகிரி, 


கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (தி.மு.க.) பி.முருகன் மற்றும் கட்சியினர் நேற்று கிருஷ்ணகிரியில் நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரபாகரிடம் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:- சூளகிரி வனத்திற்கு உட்பட்ட சானமாவு, பீர்ஜேப்பள்ளி, கொம்மேப்பள்ளி, உத்தனப்பள்ளி, காமன்தொட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள ஊராட்சிகளில் கடந்த ஓரிரு மாதங்களாக 50-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் கூட்டமாக வெளியேறி விளைநிலங்களில் உள்ள தக்காளி, சோளம், முட்டைக்கோஸ், தென்னைமரங்கள், வாழை உள்ளிட்டவைகளை சேதப்படுத்தி வருகின்றன.

இதே போல், விவசாயிகளையும் தாக்கி உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காட்டு யானைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இதுவரை எவ்வித நிவாரணம், இழப்பீடு வழங்கவில்லை. எனவே, யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கும், கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டிட, வனத்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சூளகிரியில் உள்ள கெலவரப்பள்ளி அணை கால்வாயில் இருந்து வரும் தண்ணீரை மருதாண்டப்பள்ளி ஏரிக்கும், அதன் வழியாக சூளகிரியில் உள்ள துரை ஏரிக்கும், சின்னார் அணைக்கும் தண்ணீர் திறந்துவிட வேண்டும். இதன் மூலம் விவசாயம், குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். இதே போல், மாதேப்பள்ளி ஊராட்சி பொன்னப்பகவுண்டப்பள்ளி, எகுடதம்பள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் 226 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த ஊர் ஜமாத் மூலம் ரூ.1 லட்சம் அரசுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இப்பள்ளியை தரம் உயர்த்தினால் கூடுதல் கட்டிடங்கள் கட்ட தேவையான புறம்போக்கு நிலம் உள்ளது. தற்போது, இப்பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தை தனியார்கள் ஆக்கிரமித்துள்ளனர். பள்ளி தரம் உயர்த்தி, ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story