அரூர்-வாணியம்பாடி இடையே சாலை விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்கும் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி
அரூர்-வாணியம்பாடி இடையே சாலை விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்கும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
தர்மபுரி,
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தர்மபுரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒகேனக்கல் குடிநீர் திட்டம் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் தேவையான அளவில் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. வறட்சியை எதிர்கொள்ளும் வகையில் கூடுதலாக தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒகேனக்கல் குடிநீர் கிடைக்காத இடங்களில் போர்க்கால அடிப்படையில் குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் சட்டசபை தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் பதவி காலியாக இருப்பதால் அங்கு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பொய்யானது.
இந்த 2 தொகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அரூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 870 பணிகள் ரூ.93 கோடியே 89 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பிலும், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் 378 பணிகள் ரூ.68 கோடியே 78 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பிலும் மேற்கொள்ளப்படுகிறது.
சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் முதல் வாணியம்பாடி வரை உள்ள சாலை தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டது. அதில் அரூர் பைபாஸ் சாலை பகுதியில் இருந்து இருந்து வாணியம்பாடி வரை உள்ள சாலையை விரிவாக்கம் செய்ய முதல்கட்ட பணிக்கு ரூ.293 கோடியிலும், 2-ம் கட்ட பணிக்கு ரூ.190 கோடியிலும் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த சாலை விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்கும்.
சேலத்தில் இருந்து அரூர் பைபாஸ் சாலை வரை உள்ள 51 கி.மீ. சாலை 8 வழி பசுமை சாலை திட்ட பகுதியையொட்டி வருவதால் அது இந்த சாலை விரிவாக்க திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. இந்த சாலையை பழுது பார்க்கும் பணிக்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலை சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும்.
இவ்வாறு அமைச்சர் கேபி.அன்பழகன் கூறினார்.
Related Tags :
Next Story