2-வது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சி


2-வது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 1 Jan 2019 4:30 AM IST (Updated: 1 Jan 2019 12:58 AM IST)
t-max-icont-min-icon

2-வது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி (வயது 30). இவருக்கும் திருமயம் அருகே உள்ள குழிப்பிறை பகுதியை சேர்ந்த கார்த்திக்கேயனுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவர்கள் கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு தேவதர்ஷினி(6) என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கார்த்திக்கேயன் திருமயம் பகுதியில் உள்ள ஒரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புவனேஸ்வரி புகார் அளித்தார்.புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு புவனேஸ்வரி மனு கொடுப்பதற்காக தனது மகள் தேவதர்ஷினியுடன் வந்தார். அப்போது அவர் தனது மகளின் உடலில் பாட்டிலில் மறைத்து வைத்து கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றினார். பின்னர் தனது உடலிலும் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட

போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.பின்னர் தேவதர்ஷினி அணிந்திருந்த உடையை கழற்றிவிட்டு, அவருக்கு மாற்று உடை வழங்கினர்.

இதையடுத்து புவனேஸ்வரி மற்றும் தேவதர்ஷினி ஆகியோரை புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அவர் போலீசாரிடம் அளித்த மனுவில், ‘நானும் கார்த்திக்கேயனும் கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் கோவையில் வசித்து வந்தோம். அங்கு எங்களுக்கு தேவதர்ஷினி பிறந்தாள். இந்நிலையில் எனது கணவர் திருமயம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்து உள்ளார். எனவே 2-வது திருமணம் செய்த எனது கணவர் மீதும், திருமணம் செய்து கொண்ட பெண் மீதும், இதற்கு உடந்தையாக இருந்த அவரது உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார். 

Next Story