கோவில்பட்டியில் கால்நடை ஆஸ்பத்திரியை பாரதீய கிசான் சங்கத்தினர் முற்றுகை


கோவில்பட்டியில் கால்நடை ஆஸ்பத்திரியை பாரதீய கிசான் சங்கத்தினர் முற்றுகை
x
தினத்தந்தி 1 Jan 2019 4:00 AM IST (Updated: 1 Jan 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வலியுறுத்தி, கோவில்பட்டியில் கால்நடை ஆஸ்பத்திரியை பாரதீய கிசான் சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி, எட்டயபுரம், கயத்தாறு, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட தாலுகாக்களில் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளுக்கு கோமாரி, வாய்ப்புண், கால் புண், கழிச்சல் நோய், நீலநாக்கு நோய் ஏற்பட்டு உள்ளது. எனவே கிராமப்புறங்களில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடத்த வேண்டும். கிராமப்புறங்களில் கூடுதலாக கால்நடை ஆஸ்பத்திரிகளை தொடங்க வேண்டும். கால்நடை ஆஸ்பத்திரிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். நோயால் பாதிக்கப்பட்டு இறந்த கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். கால்நடைகளை காப்பீடு செய்வதற்கு காப்பீட்டு நிறுவனத்தினர் மறுக்கின்றனர். எனவே கால்நடைகளை காப்பீடு செய்வதற்கு காப்பீட்டு நிறுவனத்தினர் விவசாயிகளிடம் பிரிமீயத்தொகை பெற வேண்டும். கோமாரி, நீலநாக்கு நோயால் பாதிக்கப்பட்ட ஆடு, மாடுகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு சித்தா, ஓமியோபதி மருந்துகளையும் பரிந்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பாரதீய கிசான் சங்கத்தினர் நேற்று கோவில்பட்டி- எட்டயபுரம் ரோட்டில் உள்ள அரசு கால்நடை ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.

சங்க மாவட்ட தலைவர் வக்கீல் ரங்கநாயகலு, செயலாளர் பரமேசுவரன், இளைஞர் அணி பொன்ராஜ், தங்க திருப்பதி, கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளையும் அழைத்து வந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் அவர்கள், கால்நடைத்துறை இணை இயக்குனர் டாக்டர் சங்கர நாராயணனிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

மனுவை பெற்றுக்கொண்ட அவர், அய்யனேரியில் 2 நாட்களில் கால்நடை மருத்துவ முகாம் நடத்துவதாகவும், தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் கால்நடை மருத்துவ முகாம் நடத்துவதாகவும், கால்நடைகளுக்கான தடுப்பூசிகள், மருந்துகள் போன்றவை கால்நடை ஆஸ்பத்திரிகளில் தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தங்களது கால்நடைகளை அருகில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று, தடுப்பூசி போட்டு, மருந்துகளை பெறலாம் என்று கூறினார். பின்னர் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 

Next Story