சுதந்திர போராட்ட தியாகி மரணம் தேசிய கொடி போர்த்தி மரியாதை


சுதந்திர போராட்ட தியாகி மரணம் தேசிய கொடி போர்த்தி மரியாதை
x
தினத்தந்தி 1 Jan 2019 4:15 AM IST (Updated: 1 Jan 2019 1:22 AM IST)
t-max-icont-min-icon

திருமானூரில் சுதந்திர போராட்ட தியாகி மரணம் தேசிய கொடி போர்த்தி மரியாதை.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது 95). சுதந்திர போராட்ட தியாகியான இவர் கடந்த 1943-ம் ஆண்டு சுபாஷ் சந்திர போசின் ராணுவ படையில் சேர்ந்து பணியாற்றினார். பின்னர் சுதந்திர போராட்டத்திற்காக ரெங்கசாமி போர் முனை வரை சென்று ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு பர்மா ரங்கூன் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு வருடம் சிறைவாசம் அனுபவித்து, சுதந்திரம் பெற்ற பிறகு மீண்டும் இந்தியாவுக்கு வந்தார். இந்த நிலையில் உடல் நிலை சரியில்லாமல் இருந்த தியாகி ரெங்கசாமி நேற்று திடீரென்று உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. இறுதி அஞ்சலி செலுத்த அரியலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரியலூர் தாசில்தார் முத்துலட்சுமி, திருமானூர் ஒன்றிய வருவாய் ஆய்வாளர் முருகேசன், மற்றும் திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் ஆகியோர் ரெங்கசாமியின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அரசு நிதியிலிருந்து ரூ.5 ஆயிரத்தை அவரின் குடும்பத்தாரிடம் வழங்கினர். இதையடுத்து சுதந்திர போராட்ட தியாகி ரெங்கசாமி உடலுக்கு தேசியக்கொடி போர்த்தப்பட்டு அரசு மரியாதை செய்யப்பட்டது. பின்னர் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ரெங்கசாமியின் இறுதி அஞ்சலியில் அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரெங்கசாமியை கவுரவிப்பது வழக்கம். இறந்த சுதந்திர போராட்ட தியாகி ரெங்கசாமிக்கு சமுத்திரம் என்கிற மனைவியும், மலர்கொடி, மல்லிகா, மகேஸ்வரி, மங்கையர்கரசி ஆகிய மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story