திருவண்ணாமலையில் பரபரப்பு பூட்டிய வீட்டுக்குள் மின்வாரிய அதிகாரி பிணம் போலீசார் விசாரணை
திருவண்ணாமலையில் பூட்டிய வீட்டுக்குள் மின்வாரிய செயற்பொறியாளர் பிணமாக கிடந்தார். அவரது சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை வேங்கிக்கால் வள்ளியம்மன் 2-வது தெருவை சேர்ந்தவர் சிதம்பரநாதன் (வயது 57). இவர் வேங்கிக்கால் மின்வாரிய அலுவலகத்தில் செயற் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகள் பிரியதர்ஷினி (வயது 27). கடந்த 27-ந் தேதி விஜயலட்சுமி தனது மகளுடன் தூத்துக்குடியில் உள்ள அவரது தாயார் வீட்டிற்கு சென்று இருந்தார். சிதம்பரநாதன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை சுமார் 5 மணியளவில் அவர்கள் 2 பேரும் வீடு திரும்பினர். வெகு நேரமாக அவர்கள் கதவை தட்டியுள்ளனர். ஆனால் சிதம்பரநாதன் வந்து கதவை திறக்கவில்லை. இதனால் பதற்றம் அடைந்த அவர்கள் பக்கத்து வீட்டுகாரர்களின் உதவியுடன் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டில் உள்ள குளியல் அறையில் சிதம்பரநாதன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடலை பார்த்து விஜயலட்சுமியும், மகள் பிரியதர்ஷினியும் கதறி அழுதனர். இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிதம்பரநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story