வந்தவாசியில் பட்டப்பகலில் நெடுஞ்சாலை துறை ஊழியர் வீட்டில் 25 பவுன் நகை திருட்டு ஓடுகளை பிரித்து இறங்கி மர்மநபர்கள் துணிகரம்


வந்தவாசியில் பட்டப்பகலில் நெடுஞ்சாலை துறை ஊழியர் வீட்டில் 25 பவுன் நகை திருட்டு ஓடுகளை பிரித்து இறங்கி மர்மநபர்கள் துணிகரம்
x
தினத்தந்தி 1 Jan 2019 3:45 AM IST (Updated: 1 Jan 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

வந்தவாசியில் பூட்டியிருந்த வீட்டின் ஓடுகளை பிரித்து உள்ளே இறங்கிய மர்மநபர்கள் 25 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

வந்தவாசி, 

வந்தவாசி பஜனை கோவில் தெருவில் வசிப்பவர் பாண்டியன். இவர் வந்தவாசியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சரஸ்வதி. மகன் பிரபாகரனுக்கு திருமணமாகி சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மற்றொரு மகன் சதீஷ்குமார் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவர் வந்தவாசியில் பெற்றோருடன் உள்ளார். இவர்களது வீட்டின் முன்புறம் கான்கிரீட் போடப்பட்டுள்ளது. வீட்டின் பின்புறம் மேல் பகுதியில் ஓடுகள் வேயப்பட்டுள்ளன.

கடந்த வாரம் சரஸ்வதி சென்னையில் உள்ள மகன் பிரபாகரன் வீட்டிற்கு சென்றிருந்தார். வீட்டில் பாண்டியனும், அவரது மகன் சதீஷ்குமாரும் இருந்தனர். நேற்று காலை இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டனர். மதிய உணவுக்காக பாண்டியன் பிற்பகல் 1 மணியளவில் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டை திறந்தார். ஆனால் கதவை அவரால் திறக்க முடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பாண்டியன் தனது வீட்டின் பின்புறம் சென்று பார்த்தார். அப்போது வீட்டின் பின்பக்க தாழ்வாரத்தின் ஓடுகள் பிரிந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதைத் தொடர்ந்து பின்புறம் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 25 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றிருந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த வந்தவாசி சரக துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் வந்தவாசி தெற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பட்டப்பகலிலேயே ஓடுகளை பிரித்து உள்ளே இறங்கி நகையை மர்மநபர்கள் திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story