இருசக்கர வாகனத்தில் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் 7 பவுன் நகை பறிப்பு மோட்டார்சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் துணிகரம்
திருவண்ணாமலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் 7 பவுன் நகையை பறித்து தப்பிய மோட்டார்சைக்கிள் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கலசபாக்கம்,
திருவண்ணாமலை அருகில் உள்ள கீழ்பாலானந்தல் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவர் சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். தினமும் கீழ்பாலானந்தலில் இருந்து சேத்துப்பட்டுவுக்கு சென்று திரும்பி வருகிறார். இவரது மனைவி தேன்மொழி (வயது 50), மங்கலம் அருகே உள்ள ஆரம்பப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.
மங்கலத்தில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகில் சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் தேன்மொழியின் கழுத்தில் இருந்த 7 பவுன் சங்கிலியை பறித்தனர். இதனால் நிலை தடுமாறி அவர் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். மேலும் சம்பவ இடத்தில் இருந்து அந்த மர்ம நபர்கள் தங்க சங்கிலியுடன் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.
இதில் காயம் அடைந்த தேன்மொழியை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தேன்மொழி கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார்சைக்கிளில் தப்பிய கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story