ஆலங்காயம் அரசு மகளிர்மேல்நிலைப்பள்ளியில் 3-வது மாடியிலிருந்து குதித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை ஆசிரியர்களை கண்டித்து பெற்றோர், உறவினர்கள் மறியல்


ஆலங்காயம் அரசு மகளிர்மேல்நிலைப்பள்ளியில் 3-வது மாடியிலிருந்து குதித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை ஆசிரியர்களை கண்டித்து பெற்றோர், உறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 1 Jan 2019 5:00 AM IST (Updated: 1 Jan 2019 2:05 AM IST)
t-max-icont-min-icon

சிறப்பு வகுப்புக்கு சென்ற பிளஸ்-1 மாணவி, பள்ளியின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வாணியம்பாடி, 

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் பகுதியில் உள்ள கல்கோவில் பகுதியை சேர்ந்தவர் கங்காதரன். இவரது மகள் மகாலட்சுமி (வயது 15), ஆலங்காயத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். தற்போது அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் தேர்ச்சியை அதிகரிக்க மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி ஆலங்காயம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. மாணவி மகாலட்சுமி தினமும் சிறப்பு வகுப்புக்கு சென்று வந்தார். நேற்றும் காலை 9 மணிக்கு பள்ளிக்கு சென்றார்.

மற்ற மாணவிகள் வகுப்புகளுக்குள் சென்றனர். ஆனால் மகாலட்சுமி வகுப்புக்குள் செல்லாமல் வெளியிலேயே நின்றுள்ளார். அந்த பள்ளியில் தரை தளம், முதல் மாடி, 2-வது மாடியில் வகுப்பறைகள் செயல்படுகின்றன. மாடியில் உள்ள வகுப்பறைகளில் பாதுகாப்பு கருதி தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளதோடு அதன் மீது தடுப்புக்கம்பிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

3-வது தளம் மொட்டை மாடியாகும். இங்கு செல்ல 2-வது மாடியின் ஒரு இடத்தில் படிக்கட்டுகள் உள்ளன. அதில் கேட் அமைக்கப்பட்டுள்ளது. அதனை பூட்டு போட்டு பூட்டாமல் விட்டிருந்தனர்.

அந்த கேட்டை திறந்து மாணவி நேற்று காலை 3-வது தளத்தில் உள்ள மொட்டை மாடிக்கு சென்றார். அங்கிருந்து அவர் திடீரென கீழே குதித்தார். அவர் விழுந்த இடத்தில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மீது விழுந்த மாணவி மகாலட்சுமி மண்டை உடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் அலறியபடி இறந்தார். உடனே வகுப்பில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் அதிர்ச்சியுடன் அங்கு வந்தனர். 108 ஆம்புலன்சுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பள்ளிக்குள் 108 ஆம்புலன்ஸ் வந்தது.

இதற்கிடையே சம்பவம் குறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு வரத்தொடங்கினர். இந்த சம்பவத்துக்கு ஆசிரியர்கள் பதில் கூற வேண்டும். அவர்கள் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என பெற்றோரும், உறவினர்களும் ஆலங்காயம் பஸ் நிலையம் அருகே திருப்பத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி மற்றும் ஆலங்காயம் போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவா, திருப்பத்தூர் கல்வி மாவட்ட அலுவலராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். சம்பவம் நடந்தபோது அவர் திருப்பத்தூர் கல்வி அலுவலகத்தில் இருந்துள்ளார். அவர் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

அதை தொடர்ந்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. உடலை பார்த்து பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுதனர். எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் மகாலட்சுமி நம்மைவிட்டு போய்விட்டாளே? இனி அவளை எப்போது காண முடியும் என கண்ணீர் சிந்தினர்.

தனியார் பள்ளிகளில்தான் அரையாண்டு தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அரசு பள்ளிகளிலும் அவர்களுக்கு இணையாக சிறப்பு வகுப்புகளை நடத்தி மாணவ, மாணவிகளை அதிக மதிப்பெண் பெறச்செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதால் அரசுப்பள்ளி ஆசிரியர்களும் தங்கள் கடமையை உணர்ந்து சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில்தான் சிறப்பு வகுப்புக்கு சென்ற மாணவி மகாலட்சுமி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆசிரியர்கள் அளித்த வீட்டுப்பாடத்தை சரியாக செய்யாததால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வீட்டில் ஏதும் பிரச்சினை இருந்ததா? அல்லது சாவுக்கு வேறு ஏதும் காரணமா? என தெரியவில்லை.

இது தொடர்பாக ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மாணவி தற்கொலை செய்த ஆலங்காயம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் மற்றும் கல்வி மாவட்ட அதிகாரிகள் சென்று சம்பவம் தொடர்பாக தலைமைஆசிரியர் சிவா மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story