கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு


கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 1 Jan 2019 4:30 AM IST (Updated: 1 Jan 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

கழிவுநீர் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமையில் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள்.

அப்போது அரியமங்கலம் பகுதியை சேர்ந்த மனித நேய மக்கள் கட்சியினர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 28-வது வார்டு அரியமங்கலம் காமராஜ் நகர் ஜின்னா தெரு பிரதான கழிவுநீர் வாய்க்கால் நீண்ட காலமாக தூர்வாரப் படாததால் கழிவு நீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, கழிவு நீர் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும், கொசு தொல்லையில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

ஆம் ஆத்மி கட்சியினர் திருச்சி நகரில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க முதல்-அமைச்சர் அறிவித்தபடி ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும், கள்ளிக்குடியில் ரூ.80 கோடியில் கட்டப்பட்டு செயல்பாடற்ற நிலையில் உள்ள மத்திய வணிக வளாகத்தை மீண்டும் திறக்க வேண்டும் என கோரி மனு கொடுத்தனர். இந்து முன்னணி சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ஜனவரி 6-ந்தேதி திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்களுக்கான பிரார்த்தனை என்ற பெயரில் நடைபெற உள்ள கிறிஸ்தவ மத பிரசார கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

உறையூர், தில்லைநகர் வழியாக ஜங்ஷன் வரை செல்லும் பஸ்களை கலெக்டர் அலுவலகம் வந்து பயணிகளை ஏற்றி செல்ல கலெக்டர் உத்தரவிடவேண்டும் எனகோரி சமூக ஆர்வலர் நவநீதன் மனு கொடுத்தார்.

திருவெறும்பூரை சேர்ந்த தொப்பி செல்லத்துரை என்பவர் திருவெறும்பூர் பகுதியில் அரசியல் கட்சிகள் செய்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரி பல முறை மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மகாத்மா காந்தியிடம் முறையிடுவதாக கூறி காந்தி படத்துக்கு மாலை அணிவித்து நூதன முறையில் மனு கொடுத்தார். 

Next Story