உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இலக்கை தாண்டி வேலூர் மாவட்டத்தில் ரூ.2,085 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கை தாண்டி, வேலூர் மாவட்டத்தில் ரூ.2,085 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
வேலூர்,
வருகிற 23, 24-ந்தேதி 2 நாட்களுக்கு உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடக்க உள்ளது. வேலூர் மாவட்டத்தில் இருந்து அதிகளவில் முதலீட்டாளர்கள் பங்கேற்கவும், தொழில் முதலீடுகளை திரட்டவும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கென மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் சத்துவாச்சாரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட கலெக்டர் ராமன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-
வேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இலக்கை விட அதிகமாக தொழில் தொடங்கிட மாவட்ட தொழில் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வாயிலாக வேலூர் மாவட்டத்தில் ரூ.2,500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
நடைபெற உள்ள மாநாட்டுக்கு ரூ.1,800 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது இலக்கையும் தாண்டி ரூ.2,085 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள நாட்களில் ரூ.3 ஆயிரம் கோடியை எட்டும் வகையில் மாவட்ட நிர்வாகம் செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது. வேலூர் மாவட்டத்தில் பெரிய தொழில் நிறுவனங்கள் இயங்கி வந்தாலும் சிறு குறு நிறுவனங்களும் அதிகளவில் இயங்கி வருவது பெருமையாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் நிலோபர்கபில் பேசியதாவது:-
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சியினை மேம்படுத்திட தமிழகத்தில் தொழில் செய்திட அனுமதி பெற எளிதாகவும் விரைவாகவும் இயலும். இந்த அனுமதிகள் எளிதாக பெற கணினி மூலம் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மகளிர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் தொழில் முனைவோர்களில் தகுதியான எந்திர தளவாடங்கள் மீது 5 விழுக்காடு அல்லது ரூ.2 லட்சம் கூடுதல் முதலீட்டு மானியம் வழங்கப்படுகிறது.
மேலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் நடத்தப்படும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் தொழில் நிறுவனங்களுக்குத் தகுதியான எந்திர தளவாடங்கள் மீதான முதலீட்டின் மதிப்பு விழுக்காடு அதிகபட்சம் ரூ.3 லட்சம் கூடுதல் முதலீட்டு மானியம் வழங்கப்படுகிறது. எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள முதலீட்டாளர்கள் பயன்படுத்தி கொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், எம்.எல்.ஏ.க்கள் ரவி, லோகநாதன், மாவட்ட தொழில் மைய மேலாளர் மணிவண்ணன், ஆவின் தலைவர் வேலழகன், மண்டல மேலாளர்கள் இந்தியன் வங்கி சுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story