பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க குமரியில் 100 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு


பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க குமரியில் 100 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு
x
தினத்தந்தி 1 Jan 2019 4:15 AM IST (Updated: 1 Jan 2019 2:53 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பதற்கு 100 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நாகர்கோவில்,


வளர்ந்து வரும் நாகரிக உலகில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து விட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத வீடுகளே கிடையாது. அந்த அளவுக்கு பிளாஸ்டிக் மக்களோடு மக்களாய் ஒன்றி விட்டது. ஆனால் பிளாஸ்டிக்கால் சுற்றுப்புற சூழல் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக ஜனவரி 1–ந் தேதி முதல் (அதாவது இன்று) தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இதற்கிடையே குமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வப்போது கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து வந்தனர்.


இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க 100 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதற்காக பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு அரசு தடை விதித்து இருக்கிறது. அதாவது ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களான பாலித்தீன் கவர், கப்புகள், தட்டுகள் உள்ளிட்டவைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே அரசு உத்தரவை மீறி ஏதேனும் கடைகளில் இதுபோன்ற பிளாஸ்டிக் பொருட்களை விற்பனைக்கு வைத்திருக்க கூடாது. மேலும் ஒரு முறை மட்டும் உபயோகிக்க கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை மக்களும் தவிர்க்க வேண்டும்.


பிளாஸ்டிக் பொருட்கள் தடையை முழுமையாக அமல்படுத்த அமைக்கப்பட்டு இருக்கும் 100 கண்காணிப்பு குழுக்களும் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஆகிய அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்வார்கள். அப்போது பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கையுடன் சேர்த்து பிளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்படும்“ என்றார்.

Next Story