வார்டு மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: வாக்காளர் அடையாள அட்டைகளை கலெக்டரிடம் ஒப்படைக்க வந்த மக்கள்


வார்டு மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: வாக்காளர் அடையாள அட்டைகளை கலெக்டரிடம் ஒப்படைக்க வந்த மக்கள்
x
தினத்தந்தி 1 Jan 2019 3:00 AM IST (Updated: 1 Jan 2019 3:03 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் வார்டு மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்காளர் அடையாள அட்டைகளை பொதுமக்கள் கலெக்டரிடம் ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம், 

சேலம் மாநகராட்சி 24-வது வார்டுக்கு உட்பட்ட கந்தம்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், உள்ளாட்சி தேர்தலுக்காக வார்டு மறுசீரமைப்பு என்ற பெயரில் 22-வது வார்டுக்கு மாற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை கலெக்டரிடம் ஒப்படைக்க வந்துள்ளதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மனு கொடுக்க வந்த பொதுமக்கள் கூறியதாவது:-

சேலம் கந்தம்பட்டியை அடுத்த எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதி மாநகராட்சி 24-வது வார்டில் இருந்தது. இதனால் அருகே உள்ள கந்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஓட்டு போட்டு வந்தோம். தற்போது மறுசீரமைப்பு என்ற பெயரில் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் வசிக்கும் மக்கள் மட்டும் 22-வது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனை அப்பகுதியை சேர்ந்த அ.தி.மு.க.பிரமுகரின் தூண்டுதலின்பேரில் செய்துள்ளனர்.

இதனால் பல்வேறு இன்னல்களை சந்திப்பதோடு, ஓட்டு போடுவதற்கு வெகுதூரம் செல்ல வேண்டும். எனவே, மீண்டும் 24-வது கோட்டத்தில் வாக்களிப்பதற்கு ஏதுவாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் ரேஷன்கார்டு உள்ளிட்ட பல்வேறு அடையாள அட்டைகளை ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதைத்தொடர்ந்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்த அதிகாரிகள், அவர்களிடம் மனுவை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

Next Story