பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த இன்று முதல் தடை: நெல்லையில் துணிப்பை, ஓலைப்பெட்டிகள் விற்பனைக்கு வந்தன


பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த இன்று முதல் தடை: நெல்லையில் துணிப்பை, ஓலைப்பெட்டிகள் விற்பனைக்கு வந்தன
x
தினத்தந்தி 1 Jan 2019 4:45 AM IST (Updated: 1 Jan 2019 3:23 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த இன்று முதல் தடை செய்யப்பட்டு உள்ளதை தொடர்ந்து நெல்லை மாநகர பகுதியில் துணிப்பைகள், ஓலை பெட்டிகள் விற்பனைக்கு வந்தன.

நெல்லை, 

பால், தயிர், எண்ணெய், மருத்துவ பொருட்களுக்கான உறைகள் தவிர தடிமன் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை தவிர எளிதில் மக்காத பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பேக், பிளாஸ்டிக்கால் ஆன தாள்கள், தட்டுக்கள், கப்புக்கள், டீ கப்புகள், தண்ணீர் கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட 14 வகையான பொருட்களை தமிழகம் முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பயன்படுத்துவதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி ஏற்கனவே பொதுமக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதையொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள கடைகளில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பேக், பிளாஸ்டிக்கால் ஆன தாள்கள், தட்டுக்கள், கப்புகள், தண்ணீர் கப்புகள் ஆகியவற்றை கடை உரிமையாளர்களே ஒதுக்கிவைத்து விட்டு அதற்கு பதிலாக துணிப்பைகள், மிட்டாய் கடைகளில் சீனி, காரங்கள் வாங்க பழைய காலத்தில் பயன்படுத்திய ஓலை பெட்டிகளை நேற்று முதலே வழங்கி வருகிறார்கள்.

நெல்லை மாநகர பகுதியான நெல்லை டவுன், பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதிகளில் பொருட்கள் வாங்க வருகிறவர்களுக்கு துணிப்பைகள் வண்ண வண்ண கலர்களில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. நெல்லை மாநகர பகுதியில் பல ஓட்டல்கள், டீக்கடைகளில் இட்லி, தோசை வாங்க வருகிறவர்கள் சட்னி, சாம்பார் வாங்க வீட்டில் இருந்து பித்தளை, எவர்சில்வர் பாத்திரங்களை கொண்டு வர வேண்டும் என்று எழுதி போடப்பட்டு உள்ளது.

நேற்று இருந்தே காய்கறி கடைகளில் துணிப்பைகளில் தான் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு மிட்டாய் கடையில் நேற்று ஓலை பெட்டியில் மக்கள் இனிப்பு, காரம் உள்ளிட்ட பொருட்களை வாங்கி சென்றனர்.

Next Story