கோவில் திருவிழாவில் தகராறு, வாலிபருக்கு கத்திக்குத்து - கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது


கோவில் திருவிழாவில் தகராறு,  வாலிபருக்கு கத்திக்குத்து -  கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 1 Jan 2019 3:45 AM IST (Updated: 1 Jan 2019 4:07 AM IST)
t-max-icont-min-icon

கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

போத்தனூர், 

கோவையை அடுத்த மதுக்கரை அருகே உள்ள குரும்பபாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 20), கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள லட்சுமி நாராயணசாமி கோவில் திருவிழாவுக்கு சென்று இருந்தார். அப்போது நடந்த சாமி ஊர்வலத்தின்போது பல்வேறு தரப்பினர் குழுக்களாக பிரிந்து நடனம் ஆடிக்கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில் நடனம் ஆடும்போது மணிகண்டனுக்கும் மரப்பாலம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் சுதீஸ் (20) மற்றும் தாமோதரன் (27), விக்னேஷ் (20) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 3 பேரும் சேர்ந்து மணிகண்டனை தாக்கினர். மேலும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மணிகண்டனின் கழுத்தில் சரமாரியாக குத்தினர். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து மயங்கி விழுந்தார். இதைதொடர்ந்து அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து, அக்கம், பக்கத்தினர் மணிகண்டனை மீட்டு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்த தகவலின் பேரில் மதுக்கரை சப்-இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, மணிகண்டனை கத்தியால் குத்திவிட்டு தப்பிஓடிய சுதீஸ், தாமோதரன், விக்னேஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். திருவிழாவில் வாலிபரை கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story