ஊட்டி அருகே, தோடர் இன மக்களின் உப்பிடும் பண்டிகை கொண்டாட்டம்


ஊட்டி அருகே, தோடர் இன மக்களின் உப்பிடும் பண்டிகை கொண்டாட்டம்
x
தினத்தந்தி 1 Jan 2019 4:15 AM IST (Updated: 1 Jan 2019 4:07 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அருகே தோடர் இன மக்களின் உப்பிடும் பண்டிகை கொண்டாடப்பட்டது.

ஊட்டி,


நீலகிரி மாவட்டம் அதிக வனப்பகுதிகளை கொண்டது. இந்த வனப்பகுதிகளையொட்டி 6 இன ஆதிவாசி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மந்து என அழைக்கப்படும் கிராமங்களில் தோடர் இன மக்கள் வசித்து வருகிறார்கள். தற்போதைய காலத்திலும் பாரம்பரிய முறைப்படி அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். தோடர் இன மக்கள் எருமை மாடுகளை வளர்க்கிறார்கள். அவர்களது வாழ்வில் எருமை மாடுகளை சார்ந்து தான் பண்டிகை, விசேஷ நிகழ்ச்சிகள், கோவிலில் பூஜைகள் நடைபெறுகின்றன.

இதனால் அதனை தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் மொர்பர்த் பண்டிகை, உப்பிடும் பண்டிகை உள்ளிட்டவைகளை தோடர் இன மக்கள் கொண்டாடுவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டு உப்பிடும் பண்டிகை ஊட்டி அருகே உள்ள முத்தநாடுமந்தில் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு மந்துகளில் இருந்து தோடர் இன மக்கள் ஒன்று கூடி, மூன்போ என்ற கோவிலில் வழிபட்டு அனைவரும் ஊர்வலமாக அருகே உள்ள மைதானத்துக்கு சென்றனர்.

அதன் பின்னர் மைதானத்தில் 2 குழிகள் வெட்டப்பட்டு, அதில் உப்பு போட்டு தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டது. இதற்காக வனப்பகுதியில் உற்பத்தியாகும் ஊற்று தண்ணீர் பயன்படுத்தப்பட்டது. இதையடுத்து தீட்டு கழித்ததை தொடர்ந்து, தோடர் இன மக்களின் கோவில் எருமை மாடுகள், வளர்ப்பு எருமை மாடுகள் அழைத்து வரப்பட்டன. அந்த எருமை மாடுகள் உப்பு கலந்த நீரை குடிக்க வைத்தனர். அதனை தொடர்ந்து தோடர் இன மக்கள் எருமை மாடுகள் குடித்த உப்பு தண்ணீரில் புற்களை தூவி வழிபட்டனர்.

இதையடுத்து அந்த தண்ணீரை அவர்கள் குடித்ததுடன், அதில் ஈர மண்ணை எடுத்து பொட்டு வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்து மூன்போ கோவிலுக்கு சென்று வழிபட்டனர். அதனை தொடர்ந்து தோடர் இன மக்கள் காணிக்கை செலுத்தி வேண்டிக்கொண்டனர். பின்னர் தங்களது பாரம்பரிய உடையணிந்து நடனம் ஆடி மகிழ்ந்தார்கள். இதுகுறித்து தோடர் இன மக்கள் கூறும்போது, எங்களது வாழ்வில் எருமை மாடுகள் முக்கியத்துவம் வாய்ந்ததால், அதனை தெய்வமாக வணங்கி வருகிறோம். உப்பு கலந்த தண்ணீரை எருமை மாடுகள் குடிப்பதால், அவற்றை நோய் தாக்காமல் இருப்பதோடு, நல்ல சக்தியோடு அதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இதனை உப்பு பண்டிகை என்றும் அழைக்கின்றனர். எங்களது மூதாதையர்கள் கொண்டாடிய உப்பிடும் பண்டிகையை பாரம்பரியம் மாறாமல் கொண்டாடி வருகிறோம் என்றனர்.

Next Story