பெரியநாயக்கன்பாளையம் அருகே, ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
பெரியநாயக்கன்பாளையம் அருகே ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெ.நா.பாளையம்,
கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த சாமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் பிரவீன் (வயது 31). டிரைவர். இவருடைய மனைவி கீதா. பிரவீன் மீது கஞ்சா விற்பனை, கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் இருந்தன. இதனால் அவருடைய பெயரை போலீசார் ரவுடி பட்டியலில் சேர்த்தனர்.இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சாமநாயக்கன்பாளையத்தில் நின்றுகொண்டிருந்த பிரவீனை மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.
இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட தொழில் போட்டியின் காரணமாக பிரவீன் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கொலையாளிகளை பிடிக்க போலீஸ் தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதற்கிடையே கொலை வழக்கில் தொடர்புடைய சாமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் (39), நெல்லையை சேர்ந்த முருகேசன் (39), திருச்சியை சேர்ந்த மணிகண்டன், ராஜசேகரன் (35), தென்னூரை சேர்ந்த மருதமுத்து (33) ஆகியோர் மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்த நிலையில் செந்தில்குமாரின் தாயார் சரசாவும் கைது செய்யப்பட்டார்.மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய காளிதாஸ் (29) என்பவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். அப்போது அவர் நெ.4 வீரபாண்டியை அடுத்த பூங்கா நகரில் பதுங்கி இருப்பதாக நேற்று முன்தினம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று பதுங்கியிருந்த காளிதாசை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story