போதிய மழை இல்லாததால் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 114.65 அடியாக குறைந்தது


போதிய மழை இல்லாததால் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 114.65 அடியாக குறைந்தது
x
தினத்தந்தி 1 Jan 2019 4:11 AM IST (Updated: 1 Jan 2019 4:11 AM IST)
t-max-icont-min-icon

போதிய மழை இல்லாததால் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 114.65 அடியாக குறைந்தது.

மண்டியா,

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டம் தலைக்காவிரியில் கடந்த மே மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை தொடர்ந்து கனமழை கொட்டி வந்ததால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது.

இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதன்காரணமாக, கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் காவிரி ஆற்றங்கரையில் இருந்த மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டனர்.

தற்போது கே.ஆர்.எஸ். அணையின் நீர்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் போதிய அளவு மழை பெய்யாததால், அணைக்கு வரும் நீரின் அளவுக்கும் வெகுவாக குறைந்தது. இதனால் அணையின் நீாமட்டமும் குறைந்து வந்தது. இதன்காரணமாக அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது.

நேற்று முன்தினம் நிலவரப்படி 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் தற்போது 114.65 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 622 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,114 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 30-ந்தேதி கே.ஆர்.எஸ். அணையில் 116.90 அடி தண்ணீர் இருந்தது. போதிய மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு (2017) 30-ந்தேதி கே.ஆர்.எஸ். அணையில் 107.21 அடி தண்ணீர் இருந்தது.

45.06 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி ஆகும்) கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் தற்போது 32.26 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story