மணல் கடத்தலில் அதிகமாக பிடிபடும் லாரிகள்; வழக்கு, அபராதத்திற்கு பயந்து மீட்காத உரிமையாளர்கள்


மணல் கடத்தலில் அதிகமாக பிடிபடும் லாரிகள்; வழக்கு, அபராதத்திற்கு பயந்து மீட்காத உரிமையாளர்கள்
x
தினத்தந்தி 1 Jan 2019 4:34 AM IST (Updated: 1 Jan 2019 4:34 AM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்தல் வழக்குகளில் பிடிபடும் லாரிகளை, வழக்கு, அபராதத்திற்கு பயந்து அதன் உரிமையாளர்கள் மீட்காமல் விடுவதால், அதிக அளவில் லாரிகள் தேங்கி உள்ளன.

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புதுவயல், சாக்கோட்டை, செட்டிநாடு, திருப்பத்தூர், நேமத்தான்பட்டி, மணிமுத்தாறு பகுதி, தேவகோட்டை, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதியில் இருந்து கடந்த சில மாதங்களாக லாரிகள், மாட்டு வண்டிகள், மினி லாரிகளில் ஆற்று மணல் கடத்துவது அதிகரித்து வருகிறது. இந்த சம்பவம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை போலீஸ் சரகத்தில் தான் அதிக அளவு நடைபெற்று வருகிறது.

இதையொட்டி சாக்கோட்டை போலீசார் தினமும் இரவு, பகல் என்று பாராமல் வாகன சோதனையில் ஈடுபட்டு, மணல் கடத்தி வரும் லாரிகளை மடக்கிப் பிடித்து, போலீஸ்நிலையத்தில் நிறுத்தி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 6 மாதங்களில் 100–க்கும் மேற்பட்ட லாரிகள், மினி லாரிகள், டிராக்டர்கள் போன்றவை மணல் கடத்தியதாக பிடிபட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் ஒருவர் கூறியதாவது:– சாக்கோட்டை போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களாக இரவு நேரத்தில் மணல் கடத்தும் கும்பலை பொறி வைத்து பிடித்து வருகிறோம். இவ்வாறு பிடிபட்ட மணல் லாரிகளை பறிமுதல் செய்து அவை போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு வருகிறது.

இந்த லாரிகளை மீட்பதற்கு சம்பந்தப்பட்ட லாரிகளின் உரிமையாளர்கள் நீதிமன்ற வழக்கு, அபராதத் தொகை ஆகியவற்றிற்கு பயந்து லாரிகளை மீட்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகின்றனர். இதனால் இங்கு மணலுடன் நிறுத்தி வைக்கப்பட்ட லாரிகள் பழுதடைந்த நிலையில், மணல் குவியலில் செடிகள் முளைத்து காணப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story