விழுப்புரத்தில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
விழுப்புரத்தில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம்,
விழுப்புரம் காகுப்பம் எம்.டி.ஜி. நகர் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் செல்போன் கோபுரம் அமைப்பதற்காக தனியார் செல்போன் நிறுவனத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூமி பூஜை போட்டு பணிகளை தொடங்கியுள்ளனர்.
இப்பகுதியில் செல்போன் கோபுரம் அமைத்தால் அதனால் ஏற்படும் கதிர்வீச்சினால் பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படும், அதோடு பலவித நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே இங்கு செல்போன் கோபுரம் அமைக்கக்கூடாது என்று சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் அப்பகுதி பொதுமக்கள் முறையிட்டுள்ளனர். இருப்பினும் அதைப்பற்றி கண்டுகொள்ளாமல் தொடர்ந்து செல்போன் கோபுரம் அமைப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு சென்று செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கக்கூடாது என்று அவர்கள் கோஷம் எழுப்பினர். இது பற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் நகர போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் இதுபற்றி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கும்படி போலீசார் அறிவுறுத்தினர். இதனை ஏற்ற பொதுமக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து, அவர்கள் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க இருப்பதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
Related Tags :
Next Story