என்.எல்.சி. 3-வது சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி - விருத்தாசலத்தில், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


என்.எல்.சி. 3-வது சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி - விருத்தாசலத்தில், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Jan 2019 4:00 AM IST (Updated: 1 Jan 2019 4:44 AM IST)
t-max-icont-min-icon

என்.எல்.சி. 3-வது சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி விருத்தாசலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம், 

நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் நிறுவனம் தனது தேவைக்கு போக மீதமுள்ள நிலக்கரியை பல்வேறு தொழிற்சாலைகளுக்கும் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது கம்மாபுரம் மற்றும் புவனகிரி பகுதியில் 3-வது நிலக்கரி சுரங்கம் அமைக்க என்.எல்.சி. நிர்வாகம் முடிவு செய்து அப்பகுதியில் உள்ள நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கு கிராம மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கம்மாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, ஆங்காங்கே ‘கோ பேக் என்.எல்.சி’ எனவும், என்.எல்.சி. நிர்வாகமே எம் நிலத்தின் ஒருபிடி மண்ணை கூட தரமாட்டோம்’ எனவும் விளம்பர பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் கோட்டு முளை, க.புத்தூர், சிறுவரப்பூர், கோபாலபுரம் பகுதியில் உள்ள வீடுகளில் பொதுமக்கள் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் என்.எல்.சி. நிறுவனம் 3-வது சுரங்க திட்டத்திற்கு 30-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும், நெல், கரும்பு, வாழை, பூ, காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து பயிர்கள் விளையும் பூமியை பாதுகாத்திட வேண்டும், கடந்த காலங்களில் நிலம், வீடு உட்பட அனைத்தும் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடும், வேலைவாய்ப்பும் கொடுக்காமல் ஏமாற்றி வரும் என்.எல்.சி. நிர்வாகத்தை வன்மையாக கண்டிப்பது, 3-வது சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் மாதவன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், பின்னர் சப்- கலெக்டர் பிரசாந்தை சந்தித்து தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story