மந்திரி பதவி பறிக்கப்பட்ட ரமேஷ் ஜார்கிகோளிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. திடீர் ஆதரவு


மந்திரி பதவி பறிக்கப்பட்ட ரமேஷ் ஜார்கிகோளிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. திடீர் ஆதரவு
x
தினத்தந்தி 1 Jan 2019 5:00 AM IST (Updated: 1 Jan 2019 4:45 AM IST)
t-max-icont-min-icon

மந்திரி பதவி பறிக்கப்பட்டதால் அதிருப்தியில் உள்ள ரமேஷ் ஜார்கிகோளிக்கு காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் ஆதரவு வழங்குவதாக திடீரென அறிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில் கர்நாடக மந்திரிசபை கடந்த 22-ந் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது மந்திரி சபையில் இருந்து ரமேஷ் ஜார்கிகோளி, சங்கர் ஆகியோர் நீக்கப்பட்டனர். புதிதாக 8 மந்திரிகள் சேர்க்கப்பட்டனர்.

மந்திரி பதவியை இழந்த ரமேஷ் ஜார்கிகோளி கடும் அதிருப்தியில் உள்ளார். மேலும் அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் அறிவித்துள்ளார். அவரை சமாதானப்படுத்த காங்கிரஸ் கட்சி, அவரது சகோதரரும், மந்திரியுமான சதீஸ் ஜார்கிகோளியை களத்தில் இறக்கியுள்ளது. மேலும் சில காங்கிரஸ் தலைவர்களும் ரமேஷ் ஜார்கிகோளியை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள னர்.

ஆனால் அவர் காங்கிரஸ் தலைவர்களை புறக்கணித்துவிட்டு டெல்லி சென்றுள்ளார். அவர் பா.ஜனதாவில் சேர முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதாவது அவர் டெல்லியில் முகாமிட்டு, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவை நேரில் சந்திக்க முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரமேஷ் ஜார்கிகோளிக்கு காங்கிரசில் சில எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரமேஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவுக்கு சென்றால், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் அவ்வாறே செய்யக்கூடும் என தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ரமேஷ் ஜார்கிகோளியை சமாதானம் செய்யும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் பெலகாவி மாவட்டம் அதானி தொகுதி எம்.எல்.ஏ.வான மகேஷ் கமடவள்ளி(காங்கிரஸ்), ரமேஷ் ஜார்கிகோளிக்கு ஆதரவு கொடுப்பதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “ரமேஷ் ஜார்கிகோளி தான் எனது தலைவர். அவர் எடுக்கும் முடிவுக்கு எனது முழு ஆதரவு உண்டு. ரமேஷ் ஜார்கிகோளிைய மந்திரிசபையில் இருந்து நீக்கியதால், அவருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அந்த அநீதியை சரிசெய்ய வேண்டும் இல்லாவிட்டால் ஏற்படும் விளைவு களுக்கு நாங்கள் பொறுப்பல்ல” என்றார்.

இது கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் கூட்டணி ஆட்சியிலும் இந்த விவகாரம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

Next Story