புத்தாண்டையொட்டி சப்ளை செய்ய முயற்சி ரூ.3 கோடி போதைப்பொருளுடன் 2 பேர் சிக்கினர்


புத்தாண்டையொட்டி சப்ளை செய்ய முயற்சி ரூ.3 கோடி போதைப்பொருளுடன் 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 1 Jan 2019 5:08 AM IST (Updated: 1 Jan 2019 5:08 AM IST)
t-max-icont-min-icon

புத்தாண்டையொட்டி ஓட்டல்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்ய வந்த 2 பேர் ரூ.3 கோடி போதைப்பொளுடன் சிக்கினர்.

மும்பை,

மும்பையில் புத்தாண்டையொட்டி ஓட்டல்களுக்கு போதைப்பொருள் வினியோகம் செய்ய ஒரு கும்பல் வரவுள்ளதாக அம்போலி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அம்போலி போலீசார் மற்றும் போதைத்தடுப்பு படை பிரிவு போலீசார் ஜோகேஸ்வரியில் உள்ள அகர்வால் எஸ்டேட் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகப்படும்படி கார் ஒன்று வந்து நின்றது. உடனே போலீசார் அங்கு சென்று காரில் இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். மேலும் அவர்கள் வந்த காரில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது காரில் இருந்த 20 கிலோ 348 கிராம் எடையுள்ள ‘எப்படிரின்’ என்ற போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ரூ.3 கோடியே 4 லட்சத்து 5 ஆயிரம் மதிப்புள்ள அந்த போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.15 ஆயிரத்து 740 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், புத்தாண்டையொட்டி அங்குள்ள ஓட்டல்களுக்கு அவர்கள் போதைப்பொருளை சப்ளை செய்ய வந்தது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போதைப்பொருள் கடத்தி கொண்டு வந்த செகந்திராபாத்தை சேர்ந்த முகமது இஸ்மாயில் குலாம் (வயது45), பால்கர் மாவட்டம் வசாய் கோலிவாடாவை சேர்ந்த தயானந்த் மானிக் (32) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Next Story