பரங்கிப்பேட்டை அருகே, ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது


பரங்கிப்பேட்டை அருகே, ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது
x
தினத்தந்தி 1 Jan 2019 3:45 AM IST (Updated: 1 Jan 2019 5:38 AM IST)
t-max-icont-min-icon

பரங்கிப்பேட்டை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதில் நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்களை சக மீனவர்கள் மீட்டனர்.

பரங்கிப்பேட்டை, 

பரங்கிப்பேட்டை அருகே புதுக்குப்பத்தை சேர்ந்தவர் குபேந்திரன் மகன் ராஜேந்திரன் (வயது 30), மீனவர். இவரும், அதே பகுதியை சேர்ந்த மீனவர்களான சித்திரைவேல் மகன் ஜீவானந்தம் (29), காத்தவராயன் மகன் முருகன் (40), மணி மகன் அஜீத்குமார் (20), முருகன் மகன் நிஷாந்த் (19), மணிகண்டன் (19) ஆகியோரும் சேர்ந்து ஏழுமலை என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் 6 பேரும் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென ராட்சத அலை எழுந்தது. இந்த அலையில் ராஜேந்திரன் உள்பட 6 பேர் சென்ற பைபர் படகு சிக்கி கண் இமைக்கும் நேரத்தில் கவிழ்ந்தது. இதில் லேசான காயமடைந்த 6 பேரும் நடுக்கடலில் தத்தளித்தனர். இதனை பார்த்த அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் விரைந்து சென்று ராஜேந்திரன் உள்பட 6 பேரையும் மீட்டனர். ஆனால் அதற்குள் கவிழ்ந்த படகு சேதமடைந்து கடலுக்குள் மூழ்கியது.

பின்னர் 6 பேரையும் மற்ற மீனவர்கள் கரைக்கு மீட்டு வந்தனர். தொடர்ந்து அவர்கள் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் மற்றும் கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story