சத்தியில் சுத்திகரிப்பு நிலையம் கட்ட எதிர்ப்பு: அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்
சத்தியமங்கலத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். மேலும் பொக்லைன் எந்திரம் சிறைப்பிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் கண்ணப்பா லே–அவுட் பகுதியில் 20 சென்ட் நிலத்தில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு சத்தியமங்கலம் நகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் நிலத்தை சமன் செய்து கொண்டு இருந்தனர். அப்போது அந்தப்பகுதி மக்கள், அதிகாரிகளிடம் கேட்டதற்கு பூங்கா அமைப்பதற்காக நிலம் சமன் செய்யப்பட்டது என்று கூறினார்கள்.
இந்தநிலையில் கண்ணப்பா லே–அவுட் பகுதியில் பூங்கா அமைக்கப்படவில்லை என்றும், அந்த இடத்தில் பாதாள சாக்கடைக்காக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டி பவானி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தகவல் சத்தியமங்கலம் மக்கள் நல கூட்டமைப்புக்கும், பொதுமக்களுக்கும் கிடைத்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நேற்று காலை 10 மணி அளவில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சத்தியமங்கலம் போலீஸ் பாதுகாப்புடன் ரங்கசமுத்திரம் கண்ணப்பா லே–அவுட் பகுதிக்கு வந்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் அந்த இடத்தில் உள்ள மேடு–பள்ளங்களை சரிசெய்தனர். மேலும் சுத்திகரிப்பு நிலையம் கட்ட அஸ்திவாரம் தோண்டப்பட்டது.
இதுகுறித்த தகவல் அந்தப்பகுதியில் வேகமாக பரவியது. இதைத்தொடர்ந்து மக்கள் நல கூட்டமைப்பின் தலைவர் ஆனைக்கொம்பு ஸ்ரீராம், சத்தியமங்கலம் சுற்றுப்புற சூழல் நீராதாரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் சங்க தலைவர் சின்னதம்பி, மாவட்ட விவசாயிகள் அணி துணை செயலாளர் வெங்கிடுசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஸ்டாலின் சிவகுமார் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் நகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். மேலும் அஸ்திவாரம் தோண்டிய பொக்லைன் எந்திரத்தையும் சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பொதுமக்கள் கூறுகையில், பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் சுத்திகரிப்பு நிலையம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது எங்களுக்கு தெரியும். தற்போது இந்த இடத்தில் 20 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டு உள்ளது. இதனால் அங்குசுத்திகரிப்பு நிலையம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதியாகி உள்ளது.
மேலும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டதால் அதில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் பவானி ஆற்றில் கலக்கும். இதனால் தண்ணீர் மாசுபட வாய்ப்பு உள்ளது. மேலும் தண்ணீரை குடிக்கும் எங்களுக்கும் நோய்கள் பரவலாம். எனவே கண்ணப்பா லே–அவுட் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக்கூடாது என்றனர்.
அதற்கு போலீசார் உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதைத்தொடர்ந்து கண்ணப்பா லே–அவுட் பகுதியில் நிலத்தை சமன் செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும் சிறைபிடிக்கப்பட்ட பொக்லைன் எந்திரத்தை விடுவித்த பொதுமக்கள் மதியம் 12 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே மயானத்தை ஆக்கிரமிப்பு செய்து சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது பொதுமக்களின் போராட்டம் காரணமாக சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.